தேனி,
தேனி கலெக்டர் அலுவலக பின்புற சாலையில், சென்று கொண்டிருந்த மொபட் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து, நெருப்பில் மெழுகு போல் உருகி முற்றிலும் நாசமானது.
தேனி அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். அவர் இன்று (திங்கட்கிழமை) தனது மொபட்டில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக பின்புற சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக வாகனத்தின் எஞ்சின் பகுதியிலிருந்து திடீரென புகை கிளம்பியது.
புகை வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாண்டியன், உடனடியாக சமயோசிதமாகச் செயல்பட்டு வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு, அதிலிருந்து கீழே இறங்கி தூரமாக ஓடினார். அவர் இறங்கிய சில நொடிகளிலேயே, பைக்கின் பெட்ரோல் டேங்க் பகுதியில் தீப்பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் தீ பைக்கின் அனைத்து பகுதிகளுக்கும் பரவி, அக்னி பிழம்பாக காட்சியளித்தது. இதில் அந்த மொபட் நெருப்பில் மெழுகு போல் உருகி, முற்றிலும் எரிந்து சாம்பலானது. பாண்டியன் உடனடியாகக் கீழே இறங்கியதால், அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினார்.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்தனர். மாவட்டத்தின் முக்கிய அரசு அலுவலகமான கலெக்டர் ஆபீஸ் அருகிலேயே இந்த பகீர் விபத்து நடந்ததால், அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.