தமிழக செய்திகள்

தேனி: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழப்பு

தேனியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

தேனி,

தேனி மாவட்டம் கம்பம் காட்டுப்பள்ளி வாசல் அருகே முத்துலட்சுமி என்பவருக்கு சொந்தமான லட்சுமி பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக பட்டாசு தயாரிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு, பட்டாசு தயாரிக்கும் மருந்துகள் இருப்பு வைக்கும் வைப்பறையாக இந்த ஆலை செயல்பட்டு வந்தது.

தேர்தலை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக ஆலைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலையில் தொழிலாளர்கள் ஆலைக்கு வந்து திறந்து போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் தீனதயாளன், சூர்யா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.