கிருஷ்ணகிரி,
தேன்கனிக்கோட்டை அருகே 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
சேலம் பெரியார் பல்கலைக்கழகம், தொழில்முறை பயிற்சி மற்றும் முதுகலை ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை முதுகலை மாணவி சத்யா, இளங்கலை மாணவர்களான சிவசங்கர், ரிஸ்வான், நேதாஜி, ஜாகிர்சன், ராமன் ஆகியோர் பேராசிரியர் வெங்கடேஸ்வரன் தலைமையில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா கொப்பக்கரை ஊராட்சி சூளகுண்டா கிராமம் பட்டிப்பாறை அருகில் உள்ள பெரியேவுகாடு என்ற பகுதியின் வடக்கே, தென்பெண்ணை ஆற்றின் தெற்கு கரையை ஒட்டிள்ள வேடன்கல் என்ற பெரிய பாறையில் 3 தொகுதிகளாக உள்ள சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அரிதான பாறை ஓவியங்களை கண்டுபிடித்தனர். அதே பாறையின் தெற்கு பகுதியில் பெருங்கற்கால கல்திட்டைகளையும் கண்டறிந்து உள்ளனர்.
இதுகுறித்து பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது:-
முதல் தொகுப்பு ஓவியம் பாறையின் கிழக்கு பகுதியில் அமைந்து உள்ளது. இதில் மனித உருவங்கள், ஒரு கை இல்லாத நீண்ட உருவம், வாளேந்திய மனிதன், விளைநிலத்தை குறிக்கும் கட்டங்கள் மற்றும் ஆவி வழிபாட்டுச் சடங்குகளை வெளிப்படுத்தும் வகையில் கைகோர்த்து நடனமாடும் மனித உருவங்கள் உள்ளன. தலை அலங்காரத்துடன் வரையப் பட்டு உள்ள ஆண் உருவம் குலத்தலைவரையோ அல்லது சடங்கு, சமய பூசாரியையோ குறிக்கலாம்.
இந்த ஓவிய தொகுப்பானது பாறையின் வெளிப்புறத்தில் உள்ளதால் இவை சூரிய வெளிச்சம், காற்று, மழை காரணமாக மங்கலாக காணப்படுகிறது. 2-வது தொகுப்பு ஓவியமானது பாறையின் அடிப்பகுதியில் காணப்படுகிறது. இதில், எளிய மனிதர்களின் உருவங்கள் கோடு போலவும், குச்சி போலவும் வரையப்பட்டு உள்ளது. குடியிருப்புகள், எல்லைகளை குறிக்கும் சதுர கட்டங்கள், சூரியன், காலச்சக்கரத்தை குறிக்கும் வட்ட வடிவக் உருவங்கள் வரையப்பட்டு உள்ளன. இவை வரலாற்று காலத்துக்கு முந்தைய மக்களின் வேட்டை சமூகத்தின் சடங்கு நடனங்களை பிரதிபலிக்கின்றன.
3-வது தொகுப்பு ஓவியமானது அதே பாறையின் தெற்கு பகுதியில் அமைந்து உள்ளது. பாறை மாடத்தின் உட்புறமும் வெளிப்புறமும் வரையப்பட்டுள்ள வடிவியல் குறியீடுகள், கைகளை மேலே உயர்த்திய மனித உருவங்கள் மற்றும் சதுர அமைப்புகள் அக்கால மக்களின் மாந்திரீக, சடங்கு வழிபாட்டு நம்பிக்கை மேலோங்கி இருந்ததை காட்டுகிறது.
இந்த பாறை ஓவிய தொகுப்புகள், இரும்புக்கால மனிதர்களின் வழிபாட்டு மரபுகளின் பின்காலத்தை எடுத்துக்கூறுகிறது. இவ்வோவிய தொகுப்புகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் இரும்பு கால மற்றும் பெருங்கற்கால தொல்லியல் மரபை வெளிப்படுத்தும் முக்கியமான தொல்லியல் சான்றுகளாக அமைந்து உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.