சென்னை,
மோடி ஆட்சியில் சாதனைகளை விட வேதனைகளே அதிகம் என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
குஜராத் முதல்-மந்திரியாக பன்னிரெண்டரை ஆண்டுகளும், இந்தியாவின் பிரதமராக பன்னிரெண்டரை ஆண்டுகள் என 25 ஆண்டுகள் பதவி வகித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடியை பா.ஜ.க.வினர் கொண்டாடி வருகிறார்கள். கடந்த காலங்களில் இந்தியாவிற்கு அடித்தளம் அமைத்த பண்டித நேரு, நவீன இந்தியாவிற்கான புதிய பொருளாதாரக் கொள்கையை வகுத்த டாக்டர் மன்மோகன்சிங் ஆகியோர் இன்றைக்கும் வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட்டு, ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஒப்பிடும் போது நரேந்திர மோடி ஆட்சியில் சாதனைகளை விட, வேதனைகள் தான் மிஞ்சியிருக்கிறது. இதுவொரு பாரபட்சமற்ற மதிப்பீடாகவே கருத வேண்டும்.
குஜராத் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றவுடனே 2002 இல் கோத்ரா ரெயில் எரிப்பை தொடர்ந்து கட்டவிழ்த்து விடப்பட்ட மதக் கலவரத்தினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஆனால், அந்த படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டிய அன்றைய முதல்-மந்திரி மோடி அதை கண்டும் காணாமல் இருந்ததை எவரும் மறந்திட இயலாது. அந்த படுகொலைக்கு காரணமானவர்கள் இன்று வரை தண்டிக்கப்படவில்லை. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகிற போது, குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்தது. 2001 இல் குஜராத் மாநில அரசின் கடன் ரூபாய் 53,000 கோடி. பதவியை விட்டு விலகுகிற போது 2014 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாயாக கடன் உயர்ந்திருந்தது. 49 சதவிகித குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு, சமூக, மனித மேம்பாட்டு குறியீடுகளில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டு குஜராத் மாநிலம் 10-வது இடத்தில் இருந்தது. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மாநிலங்களில் 13-வது இடத்தில் இருந்தது. இதுதான் மோடியின் குஜராத் மாடல் அரசின் லட்சணம்.
ஆர்.எஸ்.எஸ். பாசிச அமைப்பில் வளர்க்கப்பட்டு, மதவாத அரசியலுக்கு மிகவும் பொறுத்தமானவராக கருதப்பட்ட நரேந்திர மோடி, மூத்த தலைவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு 2014 இல் இந்திய பிரதமராக பொறுப்பேற்றார். அவர் தேர்தல் பரப்புரையின் போது ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக கூட்டுவேன், விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுப்பேன், 85 லட்சம் கோடி கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும், இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வேன் என்று நிறைய வாக்குறுதிகளை வாரி வழங்கினார். ஆனால், கடந்த 12 ஆண்டுகளில் எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தலைவிரித்தாடி வருகிறது.
கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து, கருப்பு பணம் வெள்ளைப் பணமாக மாற்றப்பட்டதே தவிர, கருப்பு பணம் ஒழியவில்லை. இதனால் இந்தியாவின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது. பொருளாதார பேரழிவு, அதனால் மக்கள் புலம் பெயர்ந்த அவலம், மருத்துவமனைகளில் நெருக்கடி என பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை சரியாக எடுக்காத காரணத்தினால் 4 கோடிக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டனர். இதில் 5.3 லட்சம் பேர் உயிரிழக்கிற நிலை ஏற்பட்டது என்று சர்வதேச சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.
மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக 10 சதவிகித கார்ப்பரேட்டுகள் 65 சதவிகித சொத்துகளை குவித்துக் கொள்கிற நிலை ஏற்பட்டது. ஒரு சதவிகித பணக்காரர்களிடம் 40 சதவிகித சொத்துகள் குவிக்கப்பட்டுள்ளது. மோடியின் பொருளாதார கொள்கையால் பயனடைந்த அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளின் சொத்து மதிப்பு 2019 முதல் 2025 வரை 400 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. மோடி ஆட்சி கார்ப்பரேட்டுகளின் ஆதரவு ஆட்சியே தவிர, ஏழை, எளியவர்களுக்கு ஆதரவான ஆட்சி அல்ல என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை மோடி அரசு புறக்கணித்தது. ஆனால், 2023 ஆண்டு நிலவரப்படி கார்ப்பரேட்டுகளின் வாராக் கடன் ரூபாய் 25 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப் பாதுகாப்பு இல்லை. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய அரசின் கடன்2014 இல் மோடி அரசு பொறுப்பேற்ற போது, இந்திய அரசின் கடன் ரூபாய் 55 லட்சம் கோடி. ஆனால் 2025 இல் ரூபாய் 181 லட்சம் கோடி. 67 ஆண்டுகளில் காங்கிரஸ் உள்ளிட்ட ஆட்சிகள் பெற்ற கடன் ரூபாய் 55 லட்சம் கோடி தான். ஆனால், 11 ஆண்டுகளில் மோடி ஆட்சி பெற்ற கடன் ரூபாய் 126 லட்சம் கோடி. 2014 இல் ஒவ்வொரு இந்தியரின் மீதும் தனிநபர் கடன் ரூபாய் 43,000 ஆயிரம் ரூபாயாக இருந்தது, இது 2025 இல் ரூபாய் 1 லட்சத்து 64 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பினால் சிறு மற்றும் குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. சிறு வணிகர்கள் வரிக் கணக்கு தாக்கல் செய்வதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள். வருமான வரி, கார்ப்பரேட்டு வரி ஆகியவற்றில் கிடைக்கிற வருமானத்தை விட மக்கள் மீது மறைமுகமாக விதிக்கப்படுகின்ற ஜி.எஸ்.டி. வரியினால் மோடி அரசு தனது கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது.
மேலும், நாடு முழுவதும் மத அடிப்படையிலான வெறுப்பு பேச்சுகள், வன்முறைகள் தலைவிரித்தாடி வருகின்றன. பசு பாதுகாப்பு என்கிற பெயரில் சில இடங்களில் நிகழ்ந்த தாக்குதல்கள் குறிப்பாக, முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் பாதிக்கப்பட்ட சம்பவங்களில் சட்ட ரீதியாக எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை. ஜனநாயக அமைப்புகள் சீர்குலைக்கப்பட்டு, மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு, கருத்துச் சுதந்திரம் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறது. அரசை விமர்சிக்கும் எதிர்கட்சிகள், ஊடகவியலாளர்கள் பொய் வழக்கு போடப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். தேர்தல் நன்கொடை பத்திரங்கள் என்ற போர்வையில் பா.ஜ.க. ஆட்சி நிதியை குவித்து வருகிறது. இதன்மூலம் தேர்தல் அரசியலில் சமநிலைத்தன்மை மறுக்கப்பட்டு வருகிறது. உணவு, எரிபொருள், வீடு, மருத்துவம் மற்றும் கல்விச் செலவுகள் குடும்பங்களின் வாழ்க்கை தரத்தை பாதிக்கின்றன. இப்படி மோடி ஆட்சியில் அவலங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்திய அரசியல் வரலாற்றில் 25 ஆண்டுகால மோடி ஆட்சி ஒரு கருப்பு அத்தியாயமாகவே பதிவு செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.