கோவை,
கோவை மாவட்ட காவல்துறை சார்பில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு வருகின்றன. அதில் பதிவாகும் காட்சிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேன் உருண்டு 10 பேர் உயிரிழந்தனர். எனவே மலைப்பாதையில் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மாவட்ட காவல்துறை சார்பில் பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் உள்ள 40 கொண்டை ஊசி வளைவுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அதில் பதிவாகும் காட்சிகளை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்தபடியே போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இதுதவிர தமிழக-கேரள எல்லை, மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் பொருத்தப்பட்ட கேமராக்களில் பதிவாகும் காட்சிகளையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
மாவட்டம் முழுவதும் உள்ள 1,500 கேமராக்களும் தற்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள நவீன கட்டுப்பாட்டு அறையில் இணைக்கப்பட்டு உள்ளன. எனவே அங்கிருந்தபடியே போலீசார் அனைத்து கேமராக்களில் பதிவாகும் காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் போலீஸ் நிலையங்கள், சோதனைச்சாவடிகளில் உள்ள அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பேசும் வசதியும், பேசுவதை கேட்கும் வசதியும் உள்ளது. இதனால் போலீசாருக்கு உடனடியாக உத்தரவுகளை பிறப்பிக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.