ஈரோடு,
நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' திரைப்படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையதளத்தில் சட்டவிரோதமாக கசிந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திரை பிரபலங்கள் பலரும் தங்கள் கண்டனங்களையும், கவலையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக தமிழ்நாடு தேர்தல் மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயலிடம் இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ‘ஜன நாயகன் படம் தயாரிப்பாளரைத் தவிர வேறு யாரிடமும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.
ஜனநாயகன் படத்தை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்தை விமர்சித்த அதே நபர்கள்தான் இதற்குப் பின்னணியில் இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது, எனவே உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.
இந்த விவகாரத்தில் ஏதோ சதி இருப்பதாகத் தோன்றுகிறது. விசாரணை நடத்தப்பட்டால் உண்மை வெளிவரும். உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான படங்கள் வெளியாகின்றன. இந்தப் படம் மட்டும் எப்படி கசிந்தது? தயாரிப்பாளரைத் தவிர வேறு யாரிடமும் இந்தப் படம் இல்லை. என தெரிவித்தார்.