தமிழக செய்திகள்

‘மேகதாது அணை கட்டினால் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது’ - அன்புமணி எச்சரிக்கை

வனப்பகுதிகளை அழித்துதான் மேகதாது அணையை கட்ட திட்டமிட்டுள்ளனர் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி,

மேகத்தாது அணைக்கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வலியுறுத்தி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் தொடங்கியிருக்கிறார். நடைபயணத்தின் தொடக்கமாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிலிக்குண்டுலு அணையை பார்வையிட்ட அன்புமணி, அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

மேகதாது அணை

“மேகதாது அணை விவகாரத்தில் நாம் சுப்ரீம் கோர்ட்டை நாட வேண்டும். மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு வரும். கர்நாடக அரசு தவறான தகவல்களை கூறி வருகிறது. குடிநீர் பயன்பாடு என்று சொல்லிவிட்டு, நாளை பாசனத்திற்கு அந்த தண்ணீரை கர்நாடக அரசு பயன்படுத்தினால் நம்மால் கேட்க முடியுமா? சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி தமிழ்நாட்டுக்கு உடனடியாக 11 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்று சொல்லியும் கர்நாடக அரசு கேட்கவில்லை.

வனப்பகுதி

மேகதாது அணை என்பது கிட்டத்தட்ட 12,500 ஏக்கர் வனப்பகுதியை காட்டை அழித்து அணை கட்டும் திட்டமாகும். நம்ம நின்று கொண்டிருக்கும் இந்த பிலிகுண்டுலு பகுதியில் இருந்து சுமார் 4 கி.மீ. தூரம் வடக்கில் இருப்பதுதான் மேகதாது. இதே போன்ற வனப்பகுதிதான் அங்கு உள்ளது. இங்கு பல நூறு ஆண்டுகள் பழமையான மரங்களும், அரிய வகை வன விலங்குகளும் உள்ளன. இவற்றையெல்லாம் அழித்துதான் மேகதாது அணை கட்ட திட்டமிட்டுள்ளனர். இது மிகப்பெரிய சூழலியல் பேராபத்து. இதை ஒருபோதும் நாம் அனுமதிக்கக் கூடாது.

நிலநடுக்கம் ஏற்படும்...

அதுமட்டுமின்றி, மேகதாதுவில் இவ்வளவு பெரிய அணையை கட்டினால், எதிர்காலத்தில் பெங்களூரு நகரத்தில் நிலநடுக்கம் வருவதற்கு கூட வாய்ப்பு உள்ளது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். சீனாவில் ‘3 கார்ஜஸ்’ அணை கட்டினார்கள். அது உலகிலேயே மிகப்பெரிய அணை. அதை கட்டிய பிறகு, சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு மேகதாது அணைக்கு எதிராக சட்ட ரீதியாக போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.