தமிழக செய்திகள்

தவெக ஆட்சிக்கும், திமுக ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை- நயினார் நாகேந்திரன்

முதல் அமைச்சர் விஜய் ஆட்சியை வெற்றிகரமாக நடத்துவார் என பார்த்தால், நிலைமை தலைகீழாக சென்று கொண்டிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் சிறுமியின் பெற்றோர், குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன் கூறியதாவது: “முதல் அமைச்சர் விஜய் ஆட்சியை வெற்றிகரமாக நடத்துவார் என பார்த்தால், நிலைமை தலைகீழாக சென்று கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் 125 சதவீதம் பாலியல் குற்றங்கள் அதிகம்; ஆனால், தவெக ஆட்சியில் இப்போதே 100 சதவீதத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார்.

அனைவரது வீட்டிலும் பெண்பிள்ளைகள் இருக்கின்றனர். தவெக ஆட்சிக்கும், திமுக ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இது சிறுபான்மையின அரசுதான் என முதல் அமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் சொன்னபோது நன்றாகதான் இருந்தது. ப்ரோ, இந்த 3 வயது குழந்தையைப் பாருங்கள். நரம்பு புடைக்க பேசுனீர்களே ப்ரோ, இந்த குழந்தைகளுக்கு யார் பதில் சொல்வார்கள். எத்தனை நாட்கள் உங்கள் ஆட்சி தாங்கும்? சட்டம் - ஒழுங்கு சரியில்லை. ஜோசப் விஜய் ப்ரோ, உங்களுக்கு காது கேட்கிறதா?” இவ்வாறு அவர் கூறினார்.