தமிழக செய்திகள்

முக்கொம்பு மேலணையில் ஏற்பட்ட உடைப்பினால் பாதிப்பு இல்லை; பொது பணி துறை

முக்கொம்பு மேலணையில் ஏற்பட்ட உடைப்பினால் பாதிப்பு இல்லை என்று பொது பணி துறை முதன்மை செயலாளர் இன்று தெரிவித்துள்ளார்.

திருச்சி,

திருச்சி முக்கொம்பில் வாத்தலை பகுதியில் ஆங்கிலேயரால் கட்டப்பட்ட 182 ஆண்டுகள் பழமை வாய்ந்த முக்கொம்பு கொள்ளிடம் அணை உள்ளது.

நேற்று இரவு 8.30 மணி அளவில் இந்த அணையில் உள்ள 6-ம் எண்ணில் இருந்து 13-ம் எண் மதகு வரை உள்ள 8 மதகுகள் திடீரென இடிந்தன. இதனால் அணைக்கட்டும், பாலத்தின் மேல் பகுதியும் அப்படியே ஆற்றுக்குள் இடிந்து விழுந்தன.

இதனால் இடிந்து விழுந்த மதகுகளின் வழியாக மட்டும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மற்ற மதகுகளில் தண்ணீர் திறந்து விடுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டு விட்டது.

இந்த நிலையில், முக்கொம்பு மேலணையில் ஏற்பட்ட உடைப்பினை தமிழக பொது பணி துறை முதன்மை செயலர் எஸ்.கே. பிரபாகர் இன்று ஆய்வு செய்துள்ளார்.

அதன்பின் அவர் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, முக்கொம்பு மேலணையில் ஏற்பட்ட உடைப்பினால் பாதிப்பு இல்லை. முக்கொம்பில் இருந்து காவிரிக்கு நீர் திறக்கும் பகுதி பாதுகாப்புடன் உள்ளது. இதனால் விவசாயத்திற்கு தேவையான நீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான அணைகள் அரசின் ஆலோசனையை பெற்று ஆய்வு செய்யப்படும்.

அணை உடைந்தது பற்றி விசாரணை நடைபெறுகிறது. அணையை சீரமைக்கும் பணிகள் முதற்கட்டம் ஆக நடைபெற்று வருகிறது. அணை உடைப்பினை அடுத்து இதற்கு நிரந்தர தீர்வு காண்பது பற்றி ஆலோசிக்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT