சென்னை,
முதல் அமைச்சர் விஜய்யை மிரட்டும் தொனியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டார். இதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதியும் எம்.எல்.ஏ கைது தேவையற்றது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது; - ஜனநாயகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மை வேண்டும். தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த இந்த 60 நாட்களிலேயே சகிப்புத்தன்மை அறவே இல்லை என்பதை நிரூபித்துவிட்டது. பிற கட்சிகளில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்களது பக்கம் இழுக்கும் இந்த அரசு, தி.மு.க-வில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் வைரத்தைப் போன்ற உறுதிமிக்க தொண்டர்களாக இருப்பதால் அவர்களை மாற்ற முடியாது என்ற காரணத்தால், இது போன்ற கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது
அனிதா ராதாகிருஷ்ணனைத் தொடர்ந்து இரண்டாவது எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டுள்ளதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தி.மு.க-வினரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே கைது செய்கிறார்கள். நீதிமன்றத்தின் மீது தங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இந்த விவகாரங்களைச் சட்டரீதியாக எதிர்கொள்ள தி.மு.க தயாராக இருக்கிறது.தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைப் பேண வேண்டிய காவல்துறை, அதற்கு நேரமில்லாமல் தி.மு.க-வுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவிடும் கல்லூரி இளைஞர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் நள்ளிரவில் சென்று அச்சுறுத்தி வருகிறது.
திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அப்படி பேசியிருந்தால் வழக்கு போடலாம்.. கைது செய்ய வேண்டிய அவசியமில்லை . சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகள் வெளிப்படுகின்றன. உண்மையாகவே தாக்க வேண்டும், கொலை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் இருந்தால் அது வேறு விஷயம். ஆனால், பேச்சின் வேகத்தில் சில வார்த்தைகள் வந்துவிடும். 'சவுக்கடி கொடுத்தார்' என்று நாமும் பேசுவோம். அதையே ஊடகங்கள் தலைப்பாகப் போடுகின்றன. அதுபோலத்தான் இந்தப் பேச்சையும் பார்க்க வேண்டும். இதை உள்நோக்கத்துடன் திட்டமிட்டு கூறியதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. முதலமைச்சர் 'கதவை மூடுவேன்' என்று சொன்னபோது, அதற்கு பதிலாக 'வார்த்தையால் அடித்துவிட்டு வெளியே வருவோம்' என்று அவர் கூறியிருக்கலாம். இதையெல்லாம் நீதிமன்றம் பார்த்து முடிவு செய்யும்” என்றார்.