மதுரை,
தேனி உத்தமபாளையம் அருகே டி அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 42). இவர் ஏலக்காய் மூடைகளை ஏற்றி வந்த வாகனம் தீ விபத்துக்குள்ளானது. இது தொடர்பான விசாரணைக்காக மதுரை செக்கானூரணி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட பாலகிருஷ்ணன் போலீஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறையில் தனது சட்டையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இது தமிழகத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
தனது கணவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை, காப்பீடு பெறுவதற்கு குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி அவரை துன்புறுத்தியிருக்கிறார்கள் என அவரது மனைவி கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் முத்து, தலைமைக் காவலர்கள் பழனிவேல்ராஜன், கலைச்செல்வி ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனிடையே பாலகிருஷ்ணன் பிரேத பரிசோதனை நடைபெற்ற நிலையில், இதில் அவரது உடலில் 5 இடங்களில் ரத்தக்கசிவு காயம் இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் ‘காவல் நிலைய மரணம்’ என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், உயிரிழந்த பாலகிருஷ்ணனின் குடும்பத்தினரை, மதுரையில் இன்று தி.மு.க. எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “காவல்நிலையத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது யாரால் நடந்தது? என்பதை விசாரிக்கவோ, குடும்பத்தினருக்கு நியாயம் பெற்றுத் தரவோ அரசு தரப்பில் இருந்து யாரும் வரவில்லை.
ஆனால் குடும்பத்தில் இருப்பவர்களை மிரட்டி, இந்த விவகாரத்தை வெளியே கொண்டு வராமல் இருக்க வைப்பதற்காக த.வெ.க. அரசு அத்தனை முயற்சிகளையும் செய்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டு, உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும். இந்த சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
இன்று முதல்-அமைச்சராக இருக்கும் விஜய், தேர்தலுக்கு முன்பு முந்தைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பார்த்து, ‘சாரி எல்லாம் வேண்டாம், நியாயம் வேண்டும்’ என்றார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்தபோது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டதோடு, அவர்களுக்கான நீதியை பெற்றுத் தந்தார். ஆனால் இந்த ஆட்சியில் சாரி சொல்லக் கூட யாரும் இல்லை.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.