சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு அமைச்சர் ஷாஜகான் அளித்த பேட்டி வருமாறு:- நாகூரில் மகான் சாகுல்ஹமீது பாதுஷா நாயகத்துடைய 470-வது சந்தனக்கூடு திருவிழா, வரும் நவம்பர் 10-ந் தேதி தொடங்கி, 14 நாட்கள் நடைபெற இருக்கிறது. அந்த நிகழ்விற்காக விலையில்லாத சந்தனக்கட்டைகளை அரசு வழங்குவதை, தமிழக அரசு பல்லாண்டு காலமாக செய்து வருகிறது.
அதன்படி, 45 கிலோ விலையில்லாத சந்தனக்கட்டையை வழங்கும் அரசாணையை முதல்-அமைச்சர் விஜய் இன்று நாகூர் தர்காவின் அறங்காவலர்களை அழைத்து வழங்கினார். மேலும், நாளைக்கு நாகூரில் ஆய்வுக் கூட்டத்தை நடத்தச் சொல்லி உத்தரவிட்டுள்ளார். அதன்படி நாளை மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து பேசவுள்ளோம். லட்சக்கணக்கான மக்கள் கூடக்கூடிய சந்தனக்கூடு திருவிழாவை மிகச் சிறப்பாக நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.
நாகூர் தர்காவின் அறங்காவலர்கள் 11 பேர் என்றாலும், 3 பேர் வயது மூப்பின் காரணமாக வரவில்லை என்பதால் 8 பேர் வந்து அரசாணையை முதல்-அமைச்சரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். தர்கா புனரமைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை முதல்-அமைச்சரிடம் கொடுத்துள்ளோம். அவற்றை பரிசீலிப்பதாக கூறியுள்ளார்.
நாகூர் தர்கா வளாகத்தில் யானை இருப்பது வழக்கம். யானை இறந்து 12 ஆண்டுகள் ஆன நிலையில், யானை வேண்டும் என்ற அறங்காவலர்களின் கோரிக்கையையும் முதல்-அமைச்சரிடம் வைத்தோம். அதையும் தருவதாக அவர் கூறியுள்ளார். சந்தனக்கட்டைகள் வழங்குவதற்கான அரசாணையை த.வெ.க. கட்சி நிர்வாகியின் மூலம் வழங்குவதாக புகார் எழுந்தது. சந்தனக்கூடு திருவிழாவில் எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லை தவறான புரிதல் காரணமாக தவறான செய்தி வெளியாகியிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.