சென்னை,
தமிழக பாஜக தலைவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை சீர்குலைந்துவிட்டது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூடியதில் வெளிப்படைத்தன்மை இல்லை. டாஸ்மாக் கடைகள் எத்தனை மூடப்பட்டுள்ளன என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதில் தவறு இல்லை. பிரதமரை முதல் அமைச்சர் வரவேற்பது என்பது மரபு. முதல் அமைச்சரை நேற்று நான் சந்தித்தேன்.அவருக்கு சால்வை அணிவித்தேன். அது மரியாதை நிமித்தமானது. நம்முடைய முதல் அமைச்சரை நாம் கவுரவப்படுத்த வேண்டும். அதேபோல பிரதமர் மோடியை முதல் அமைச்சர் விஜய் வழியனுப்பி வைத்ததில் குறை சொல்லக் கூடாது. முதல் அமைச்சர் விஜய்க்கு அணிவித்த சால்வை விவகாரத்தை யாரும் கொச்சைப்படுத்தாதீர்கள்.
செவிலியர்கள் போராட்டத்தைப் பொறுத்தவரை, எதிர்க்கட்சியாக இருந்தபோது அமைச்சர் ஆதவ் ஆதரவு தெரிவித்து போராடினார். ஆனால், இன்று செவிலியர்களைக் கட்டாயப்படுத்தி கைது செய்திருக்கிறார்கள். இது தவறு. தேர்தல் அறிக்கையில் சொன்ன எதையும் தவெக அரசு செய்யவில்லை. மின்வெட்டு பிரச்சினையில் அமைச்சர்களும் முதல் அமைச்சரும் தனிக் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.