சென்னை,
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் காவிரி மற்றும் மேகதாது அணை தொடர்பாக தமிழகத்தின் நியாயமான உரிமைகளை அலட்சியப்படுத்தும் வகையில் தெரிவித்துள்ள கருத்துகள் கடும் கண்டனத்திற்குரியவை. காவிரி நதி என்பது தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் நேரடியாக இணைந்த உயிர்நதி என்பதையும், அதன் நீர்வரத்தை பாதிக்கும் எந்த முயற்சியும் தமிழக மக்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதையும் கர்நாடக அரசு உணர வேண்டும்.
“காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை எதிர்க்கும் உரிமை தமிழ்நாட்டிற்கு இல்லையா? கர்நாடக அரசு தொடர்ந்து தமிழகத்தின் நீர்வரத்து உரிமையை பறிக்க முயல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த குரலில் செயல்பட வேண்டும்” என்ற நிலைப்பாடு தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வாகும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களையும் மதிக்காமல் அரசியல் ஆதாயத்திற்காக தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. தமிழக அரசு இவ்விவகாரத்தில் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.