தமிழக செய்திகள்

தமிழகத்தில் நேர்மையான நல்லாட்சி அமைய வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

த.வெ.க. முழு மெஜாரிட்டியில் வெற்றி பெற்று, அதில் கூட்டணி கட்சியினருக்கு அமைச்சர் பதவி கொடுத்திருந்தால் வரவேற்கலாம்.

விருத்தாசலம்

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ. நேற்று விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதை தேர்தலுக்கு முன்பிருந்து பலமுறை கூறியதுதான். கூட்டணி ஆட்சி வந்தால் தே.மு.தி.க. வரவேற்கும் என நான் கூறியிருக்கிறேன். முதலில் ஒரு மாற்றம் வந்திருக்கிறது. இது ஒரு ஆரோக்கியமான மாற்றமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு மெஜாரிட்டி இல்லாததால் எல்லோரையும் அழைத்து அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறார்கள். இது குதிரை பேரத்திற்கு வழி வகுக்கக் கூடாது. இதனை தான் நாங்கள் வலியுறுத்தி சொல்கிறோம்.

த.வெ.க. முழு மெஜாரிட்டியில் வெற்றி பெற்று, அதில் கூட்டணி கட்சியினருக்கு அவர்கள் அமைச்சர் பதவி கொடுத்திருந்தால் வரவேற்கலாம். மெஜாரிட்டி இல்லாத போது ஆதரவு கொடுப்பவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது, தவறான முன்னுதாரணமாக மக்கள் பார்க்கிறார்கள். முதல்-அமைச்சராக பதவி ஏற்றவர் என்னவெல்லாம் சொல்லி பதவிக்கு வந்திருக்கிறார். தி.மு.க.வை தீய சக்தி என்றும், அ.தி.மு.க.வை ஊழல் சக்தி என்றும் கூறினார். ஆனால் இன்று அவர்களின் ஆதரவோடு தான் ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் குதிரை பேரம் மற்றும் லஞ்ச ஊழலுக்கு அப்பாற்பட்டு ஒரு நேர்மையான நல்லாட்சி அமைய வேண்டும் என்பதுதான் எனது கருத்து.

இவ்வாறு அவர் கூறினார்.