தமிழக செய்திகள்

முட்டை கொள்முதலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை; முதல் அமைச்சர் பழனிசாமி விளக்கம்

முட்டை கொள்முதலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று முதல் அமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

கோவை,

முதல் அமைச்சர் பழனிசாமி கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசும்பொழுது, முட்டை கொள்முதலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என கூறினார்.

தமிழகத்தில் முட்டை கொள்முதல் செய்வதில் நிதி முறைகேடு நடந்துள்ளது என மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு எழுப்பியிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசின் டெண்டர்களில் முறைகேடு இல்லை. ஒப்பந்த சட்ட திட்டத்திற்கு உட்பட்டே டெண்டர்கள் விடப்படுகின்றன.

முட்டை டெண்டரில் பல பிரச்னைகள் எழுந்த நிலையில் மாநில அளவில் டெண்டர் கோரப்பட்டது. இதுவரை 5 ஆண்டுகளில் ரூ.2,031 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு முட்டை கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

ஆனால் சத்துணவு முட்டை கொள்முதலில் ரூ.5 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளது என குற்றச்சாட்டு கூறப்படுகிறது. அரசியல் ஆதாயம் தேட அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

தி.மு.க. ஆட்சியில் மாநில அளவில் டெண்டர் கோரும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின்னர் அக்கட்சியின் ஆட்சியில் 2008ல் ஒருவருக்கு 15 சதவீத கூடுதல் விலையுடன் டெண்டர் விடப்பட்டு உள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.

அதன்பின்னர் அவர் செய்தியாளர்களின் மற்றொரு கேள்விக்கு, அ.தி.மு.க.வை யாராலும் உடைக்க முடியாது என கூறினார்.

முதல் அமைச்சரின் உறவினர் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனை பற்றிய மற்றொரு கேள்விக்கு, தமிழ்நாடு முழுவதும் உறவினர்கள் உள்ளனர். பல நிறுவனங்கள் ஒப்பந்தம் எடுத்து பல பணிகளை செய்கின்றன. அவர்கள் வரி செலுத்தாவிட்டால் சோதனை நடக்கும் என அவர் பதிலளித்து உள்ளார்.