ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் அமைச்சர் நிர்மல்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் நவோதயா பள்ளிகள் அனுமதிக்கப்பட மாட்டாது. தமிழகத்திற்கான மாநில கல்வி கொள்கை தவறாமல் பின்பற்றப்படும். தற்போதைய தலைமை செயலகத்தில் போதிய இடவசதி இல்லாததால் புதிய தலைமை செயலகம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு, சுற்றுச்சூழலுக்கு, இயற்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தலைமைச் செயலகம் அமையும்.
மின்சார தட்டுப்பாட்டை போக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு காற்றாலை மின் உற்பத்தி மிக கணிசமாக குறைந்ததால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டது. இருப்பினும் இதனை போக்க மின்சாரத்தை கொள்முதல் செய்து தட்டுப்பாட்டை சமாளித்து வருகிறோம். வெளியில் இருந்து மின்சாரத்தை வாங்கி வினியோகம் செய்வதாலும் எக்காரணம் கொண்டும் மின் கட்டணம் உயராது.
தமிழக அரசின் நோக்கம் கொள்முதல் செய்து வினியோகம் செய்வதைவிட உற்பத்தி செய்து பற்றாக்குறையை சமாளிப்பதுதான். அதற்கு ஏற்ப நீண்டகால ஒப்பந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. உப்பூர் பகுதியில் 2010-ம் ஆண்டு அனல்மின் நிலைய திட்டப்பணிகள் ரூ.6 ஆயிரம் கோடியில் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த பணிகள் 2021-ம் ஆண்டு எந்த முன்அறிவிப்பும் இன்றி திடீரென மூடப்பட்டது.
மக்களின் வரிப்பணம் வீணாகியுள்ளது. இந்த திட்டத்திற்காக வாங்கப்பட்ட கடன் அடைக்கப்பட்டது. அப்படி பார்க்கும்போது ரூ.12 ஆயிரம் கோடி வரை மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. நேரடியாக ஆய்வுசெய்து விசாரணை நடத்தி இந்த திட்டத்தை மறுஉருவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.