மதுரை,
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மருது சகோதரர்கள் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி, குருபூஜை விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் நிஷாந்த்கி ருஷ்ணா தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில், நிகழ்ச்சியின்போது பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து கலெக்டர் கூறியதவாது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவின்படி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாடகை வாகனங்களில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள், டிராக்டர், ஆட்டோ, சிறிய சரக்கு வாகனம், திறந்த வெளி வாகனம், சைக்கிள் போன்ற வாகனங்கள் மூலமாக பயணம் செய்யவோ, நடை பயணமாகவோ கலந்து கொள்ளவோ அனுமதி கிடையாது.
சொந்த 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் முன்அனுமதி பெற்று கலந்து கொள்ளலாம். அப்போது வாகனத்தின் ஆர்.சி. மற்றும் வாகன ஓட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். சொந்த வாகனங்களில் வருவோர் உள்ளூர் போலீஸ் நிலையத்தில் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, அங்கே தரப்படும் அனுமதி சீட்டினை வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்டியிருக்க வேண்டும். ஒவ்வொரு போலீஸ் மண்டலத்திற்கும் தனித்தனி வண்ணத்தில் அனுமதி சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
வாகனத்தில் ஒலி பெருக்கிகள் பொருத்தவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது. சொந்த வாகனத்தை வாடகைக்கு விடக்கூடாது. வாகனங்களில் ஆயுதங்கள், மது பாட்டில்கள் எடுத்து செல்வது, வாகனங்களின் கூரை மேல் பயணம் செய்வது போன்றவைகள் தடை செய்யப்பட்டுள்ளன. வெடி போடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சுவர் விளம்பரங்கள் செய்ய அனுமதி கிடையாது. வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் வழியில் நினைத்த இடத்தில் நிறுத்தக்கூடாது. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்கள் கிராமங்களிலிருந்து காலை 11 மணிக்குள் புறப்பட வேண்டும்.
அந்தந்த மாவட்டங்களில் முறையான அனுமதி பெற வேண்டும். வரையறுக்கப்பட்டுள்ள வழித்தடங்களிலேயே வந்து செல்ல வேண்டும். தடை செய்யப்பட்டுள்ள வழித் தடங்களில் செல்லக்கூடாது. பிளக்ஸ் போர்டுகள் பேனர்கள் வைக்க அனுமதியில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதில் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், மாவட்ட வருவாய் அதிகாரி அன்பழகன், மாநகராட்சி துணை கமிஷனர் ஜெயினுலாபுதீன், போலீஸ் துணை கமிஷனர்கள் கார்த்திக். வனிதா, இனிகோ திவ்யன், உசிலம்பட்டி சப்-கலெக்டர் உட்கர்ஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.