தமிழக செய்திகள்

‘பழைய திட்டங்களின் பெயர்களை மட்டுமே மாற்றியுள்ளனர்’ - வேளாண் பட்ஜெட் குறித்து பிரேமலதா விஜயகாந்த்

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு எந்தவிதமான ஒதுக்கீடும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

சென்னை,

2026-27ஆம் நிதியாண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட், சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில், வேளாண் பட்ஜெட்டில் பழைய திட்டங்களின் பெயர்களை மட்டுமே மாற்றியுள்ளனர் என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ. விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

“இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில், பல்வேறு துறைகளுக்குப் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டன. இருப்பினும், மிகவும் முக்கியமானதாக கருதப்படும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு எந்தவிதமான ஒதுக்கீடும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

தற்போது விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல், திறந்தவெளிகளில் சேமித்து வைக்கப்படுகிறது. முறையான சேமிப்புக் கிடங்கு வசதிகள் எதுவும் இல்லை. தரிசு நிலங்களை சாகுபடிக்கு ஏற்ற நிலங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. பழைய திட்டங்களின் பெயர்களை மட்டுமே மாற்றியுள்ளனர்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.