தமிழக செய்திகள்

பலகீனமான அரசு என காட்ட நினைக்கிறார்கள்: விஜய் வாய்ப்பளிக்க கூடாது: கிருஷ்ணசாமி அறிவுரை

நம்பிக்கை வாக்கெடுப்பில் பேசிய பலரும் மரபுகளில் இருந்து வெகுதூரம் விலகிச் சென்று, தாங்கள் விரும்பியதையெல்லாம் பதிவு செய்தார்கள் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருப்பதாவது:

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 234 தொகுதிகளில் 108 இடங்களில் வெற்றி பெற்று, தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் சாதனையை தவெக நிகழ்த்தியுள்ளது. சட்டமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பிலும் சில கட்சிகளின் துணையோடு வெற்றி பெற்று, தமிழக முதலமைச்சர்ஜோசப் விஜய் அவர்கள் வீறுநடை போடுகிறார்! அவரது வெற்றியின் மூலம் பல அரசியல் மாற்றங்கள் நடைபெற்று இருக்கின்றன.

1967-ஆம் ஆண்டிற்குப் பிறகு, கடந்த 59 வருடங்களாக நிலவி வந்த 'திமுக அல்லது அதிமுக' என்ற இருமுனை அரசியல் களம், இந்த முறை மூன்றாவது சக்திக்கு இடம் அளித்துள்ளது. அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் பல வட மாநிலங்களிலும், இந்தியாவை ஆளுகின்ற மத்திய அரசில் கூட தொடர்ந்து பல வருடங்களாக கூட்டணி ஆட்சி முறை இருந்து வரினும், தமிழகத்தில் மட்டும் ஒற்றைக்கட்சி ஆட்சி முறை என்பதே எழுதப்படாத விதியாக இருந்து வந்தது". "ஆட்சியில் பங்கு என்பது சாத்தியமே இல்லாத விஷயம்; கூட்டணி ஆட்சியைத் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்" என்று, கீறல் விழுந்த ரெக்கார்டு பிளேயர் போல திராவிடக் கட்சிகள் கூட்டணி குறித்துக் குரல் எழுந்த போதெல்லாம் ஒருமித்த குரலில் மறுப்புத் தெரிவித்தார்கள். வரலாறுகளை மக்களே மாற்றி அமைக்கும் தகுதி வாய்ந்தவர்கள் என்பதற்கு இணங்க, ஏறக்குறைய 60 ஆண்டுகாலம் நீடித்து வந்த ஒற்றைக்கட்சி ஆட்சி முறைக்கு முடிவுரை எழுதப்பட்டுவிட்டது. இனிவரும் காலங்களிலும் "கூட்டணி ஆட்சி" என்பதே நிதர்சனம் என்பதும் நிலை நாட்டப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முந்தைய நாள் வரையிலும் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை என்று கூறிவந்த எதிரும் புதிருமாய் இருந்த இரு திராவிடக் கட்சிகளும், தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள திரைமறைவில் கூட்டணி ஆட்சிக்கு மேற்கொண்ட முயற்சிகள் அம்பலமாகியுள்ளன; அதிலும், ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் கூட்டணி பேச்சு வார்த்தையின்போது கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகுமேயானால், எதிர் கட்சியாக கூட அமர்ந்து கொள்வோம்; ஆட்சியில் பங்கு இல்லை என்று நம்மிடம் கூறியவர் தான்.!நாம் கடந்த இரண்டு வருடங்களாக ஊடகங்களின் வாயிலாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம். "ஆட்சிக்கு வர முடியவில்லை" என்று தற்போது ஆதங்கப்படும் தலைவர்கள், மாறிவரும் அரசியல் சூழல்களை கணக்கில்கொண்டு, ஜனநாயக ரீதியாக ஆட்சியில் பங்களிக்க தேர்தலுக்கு முன்பே வெளிப்படையாக அறிவித்து செயல்பட்டிருந்தால், மெகா கூட்டணியும் அமையப் பெற்றிருக்கும்; ஆட்சியில் பங்கு என்ற உணர்வுடன் அக்கட்சிகளின் தொண்டர்கள் கூட்டணி வெற்றிக்கு அரும்பாடு பட்டிருப்பார்கள்; தேர்தல் தீர்ப்புகளும் வேறு விதமாக இருந்திருக்கும்.

ஆளுநர் நடத்திய விழாவில் பாடப்பட்ட வந்தே மாதரத்திற்கும், பதவியேற்காத அரசிற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை; எனினும், அதற்கும் விஜய் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ரதன் பண்டிட் என்பவரைத் தனது அரசியல் உதவியாளராக நியமித்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆட்சி அமைந்த அடுத்த நாளே மகளிர் உரிமைத்தொகை விடுவிக்கப்பட வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் பேசிய பலரும் மரபுகளில் இருந்து வெகுதூரம் விலகிச் சென்று, தாங்கள் விரும்பியதையெல்லாம் பதிவு செய்தார்கள். சில கட்சிகள் வெளியில் இருந்து கொடுக்கும் ஆதரவிற்கு, அளவிற்கு மீறி அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள்; தங்களின் அனைத்துத் திட்டங்களையும் இந்த அரசை வைத்து திறைவேற்றத் துடிக்கிறார்கள். ஊசலாட்டம் கொண்டவர்கள், ஊழல் கரை படிந்தவர்களின் ஆதரவு முன்னே இனிக்கும்; பின்ளே கசக்கும். தமிழக முதல்வர் விஜய் அவர்களின் அரசை "பலகீனமான அரசு" என்று பலர் தப்புக் கணக்குப் போடுகிறார்கள்; "பலகீனமான அரசு" என உலகிற்கு காட்டவும் காத்தும் கொண்டிருக்கிறார்கள், அதற்கு தமிழக முதல்வர் விஜய் அவர்கள் எவ்விதத்திலும் வாய்ப்பளித்து விடக் கூடாது என்பதே தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்” இவ்வாறு தெரிவித்துள்ளா