தமிழக செய்திகள்

என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்க முயற்சித்தனர்: திருமாவளவன்

கூட்டணி கட்சிகள் முன்வைக்கும் கோரிக்கைகளை பரிசீலித்து உடனுக்கு உடன் நடவடிக்கை எடுக்கும் முதல் அமைச்சரின் பாங்கு பாராட்டுக்குரியது என்று திருமாவளவன் கூறினார்.

திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: டெல்லி பிரதிநிதி குறித்து அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் கொடுத்துள்ளார். அது தவெக கட்சி விவகாரம். இது அரசு பதவி தான் என்றாலும், இதற்கான அதிகாரம் முதல் அமைச்சருக்கு இருக்கிறது. இதில் எந்த பாதிப்பும் நேரப்போவதில்லை என்ற கருத்தை அமைச்சர் வெளிப்படுத்தி உள்ளார். தூய்மை பணியாளர்கள் தனியார்மயப்படுத்துவதை கைவிட வேண்டும் என்று விசிக சார்பில் வேண்டுகோள் வைத்தோம். முதல்வர் விஜய் அந்த வேண்டுகோளை ஏற்று, கைவிடுவதாக அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது.

விஜய்க்கு பாராட்டு

கூட்டணி கட்சிகள் முன்வைக்கும் கோரிக்கைகளை பரிசீலித்து உடனுக்கு உடன் நடவடிக்கை எடுக்கும் முதல் அமைச்சரின் பாங்கு பாராட்டுக்குரியது. வெள்ளை அறிக்கை என்பது கடந்த கால ஆட்சி நிர்வாகத்தில் எவ்வாறு நிதி நிலைமை இருந்தது என்பதை பொது மக்களுக்கு அறிவிக்கும் நடைமுறையாகும். அதனை இந்த அரசு வெளிப்படையாக அறிவிப்பது ஜனநாயகத்தில், வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதை உணர்ந்து அரசு செயல்படுகிறது என நம்புகிறேன். வரவேற்கிறேன். மதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய முதல்வர் விஜய் கூறியதாக வைகோ கூறியது பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை

வலிமை இல்லை

திமுக கூட்டணியைப் பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் இயங்கிய கட்சி விசிக. தேர்தலுக்கு முன்பே திமுக கூட்டணியை உடைப்பதற்குப் பலரும் முயற்சித்தார்கள். என்னை வைத்தே உடைக்கும் முயற்சியும் நடந்தது. நான் அதற்கு இணங்கவில்லை. தேர்தலுக்குப் பின்னர் இந்தக் கூட்டணியைக் கட்டிக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, என்னைப்போன்றவர்களுக்கு இல்லை. அந்த வலிமை எனக்கில்லை. ஆகவே, இதுகுறித்து பதில்கூற வேண்டிய பொறுப்பு திமுக தலைமைக்குத்தான் உள்ளது” என்றார்.