தமிழக செய்திகள்

சேலம் அருகே பரபரப்பு... பொதுமக்களின் தாக்குதலுக்கு பயந்து திருடனே போலீசுக்கு போன் செய்த சம்பவம்..!

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், திருடனை பொதுமக்களின் பிடியிலிருந்து காப்பாற்றி கைது செய்தனர்.

சென்னை,

சேலம் அருகே திருடச் சென்ற இடத்தில் மக்களின் தாக்குதலுக்கு பயந்து திருடனே போலீசாரை அழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திறந்து கிடந்த வீடு

சேலம் அருகே எம். புதுப்பாளையம் சிவசக்தி அவென்யூவில் வசித்து வருபவர் சிவகுமார் (32 வயது). அவரது மனைவி ஷர்மிளா தேவி (28 வயது). இருவரும் வெளியூர் சென்றுவிட்டு, கடந்த 7-ம்தேதி இரவு சுமார் 10.45 மணியளவில் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் முன்கதவு திறந்திருந்ததையும், மாடியில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தப்பிக்க முயற்சி

வீட்டிற்கு உள்ளே யாரோ இருப்பதை அறிந்த ஷர்மிளா தேவி கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அந்த சமயத்தில் வீட்டிலிருந்து ஒரு நபர் வெளியேறி தயாராக வெளியில் நிறுத்தியிருந்த தனது பைக்கை எடுத்துக்கொண்டு தப்பிக்க முயன்றார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை விரட்டிச் சென்றனர்.

போலீசுக்கு தகவல்

இதனால் பயந்த அவர் கூட்டத்திலிருந்து தப்பிப்பதற்காக அங்கிருந்த ஒரு வீட்டுக்குள் சென்று ஒளிந்து கொண்டார். பின்னர் தப்பிக்க வேறு வழியில்லை என்பதை உணர்ந்த அந்த நபர், பொதுமக்களின் தாக்குதலுக்கு பயந்து, போலீசுக்கு போன் செய்து அழைத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவரை பொதுமக்களின் பிடியிலிருந்து காப்பாற்றி கைது செய்தனர். மேலும் அவரது பைக்கை பறிமுதல் செய்தனர்.

கட்டிடத் தொழிலாளி

தொடர்ந்து அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. புதுக்கோட்டை மாவட்டம், ராஜபட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (35 வயது). கட்டிடத் தொழிலாளி. இவர் தற்போது சேலம், கரிப்பட்டியில் வசித்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று, அவர் பைக்கில் கோயம்புத்தூருக்குச் சென்றுவிட்டு சேலம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தார்.

நகைகள் மீட்பு

அப்போது பூட்டியிருந்த ஒரு வீட்டை கவனித்து, அதை உடைத்து திருட முயன்றுள்ளார். வீட்டில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிக் கொண்டிருந்த சமயத்தில் வீட்டு உரிமையாளர்கள் வந்துள்ளனர். தப்ப முயன்றபோது மாட்டிக்கொண்டது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் விஜயகுமாரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த நகைகளை மீட்டனர்.

SCROLL FOR NEXT