மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் மணிவிழா, பீமரதசாந்தி, பவளவிழா, சதாபிஷேக விழா போன்ற விழாக்கள் கொண்டாடப்படும். திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கடந்த 1997-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகம்
இந்தநிலையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமசிவாய என விண்ணதிர சரண கோஷம் எழுப்பினர். 11 மணிக்கு மூலஸ்தான குடமுழுக்கும், தீபாராதனையும் நடைபெற்றது. குடமுழுக்கு தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை காண அதிகாலை 4 மணி முதல் கோவில் வளாகத்தில் பக்தர்கள் குவிய தொடங்கினர். இதனால் திருக்கடையூரில் எங்கு நோக்கினும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கும்பாபிஷேகத்தையொட்டி திருக்கடையூர் பகுதியில் ஆங்காங்கே பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.