உலகளந்த பெருமாள் கோவில் 
தமிழக செய்திகள்

திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழா

விழாவின் நிறைவு நாளான 14ம் தேதி சுவாமிக்கு விசேஷ பூஜையைத் தொடர்ந்து நூறு பாத்திரங்களில் அக்காரவடிசல் நைவேத்யம் சமர்ப்பிக்கப்படுகிறது.

திருக்கோவிலுார்,

திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா நடைபெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுாரில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலமான உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடிப்பூர பெருவிழா 7 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளான நேற்று காலை 6.00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 7.30 மணி வரை நித்திய பூஜைகள் நடைபெற்றன. 10.00 மணிக்கு ஆண்டாள் கண்ணாடி அறையில் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம், நான்காயிர திவ்ய பிரபந்த சேவை, தீபாராதனை, சற்றுமறை, பிரசாத விநியோகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுவாமி ஆஸ்தானம் எழுந்தருளினார்.

விழாவின் நிறைவு நாளான 14ம் தேதி காலை ஆண்டாள் நாச்சியார் சமேத தேகளீச பெருமாள் தங்க பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மதியம் 12.00 மணிக்கு கண்ணாடி அறையில் சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம், சிறப்பு அலங்காரத்தில், நூறு தடா அக்காரவடிசல் நைவேத்யமும், மாலை ஆண்டாள் நாச்சியார் சமேத தேகளீச பெருமாள் திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.