சென்னை,
வில்லிவாக்கத்தில் தவெகவின் மகளிர் தின விழாவில் அக்கட்சியின் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-
தமிழ்நாட்டு மகளிரின் உரிமைகள், சுதந்திரம், பாதுகாப்பு போன்ற வளமான வருங்காலத்தை உறுதிப்படுத்தும் விதமாகக் கழகத் தலைவர் அவர்கள் மகளிர் தின விழாவில் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் அமைந்திருப்பதாகப் பாராட்டப்பட்டு வருகிறது.
அதன் சிறப்புகளையும், தொலைநோக்குப் பார்வைகளையும் விளக்கும் விதமாக சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி சார்பாக இன்று நடைபெற்ற மகளிர் தின விழா இருந்தது.
இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்து அரசுப் பேருந்துகளிலும் கட்டணமின்றி மகளிர் பயணிக்கலாம் என்ற வாக்குறுதி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாக அமையப்போகிறது.
திருமணமாகும் சகோதரிகளுக்கு ஒரு பவுன் தங்கத்துடன் சீர் செய்வது தொடங்கி தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளைப் பொன் மகிழ்வுடன் வரவேற்பது வரை கழகத் தலைவர் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் காலம் கடந்து போற்றப்படும்.
இவை, தமிழ்நாட்டுப் பெண்களின் சாதனைப் பயணத்தில், ஒரு பொறுப்புமிக்க உறவாகத் துணைநிற்கும் நல்லரசிற்கு உதாரணமாகப் போகிறது.
இதனை உணர்ந்தே, நம் மக்கள் தலைவர் அவர்களை முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்க முடிவெடுத்துவிட்டார்கள் தமிழக மகளிர். மலரவிருக்கும் மக்களாட்சி, நம் மகளிர் உட்பட அனைத்து தரப்பு மக்களின் நலனைக் காக்கும் ஆட்சியாக இருக்கப்போகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கட்டும், தவெக தலைவர் விஜய் ரோடு ரோடாக செல்லும்போது மிகப்பெரிய மாற்றம் வரும். ஒவ்வொரு ரோடாக செல்லும்போது மக்கள் எழுச்சியை அப்போது பார்ப்பார்கள். அன்றைக்கு எங்களை முடக்கி வைக்க முடியாது.
திடீரென வந்த தே.மு.தி.க.வுக்கு கூட மாநிலங்களவை சீட் கொடுத்து நிறைய சீட் கொடுக்கிறார்கள். ஆனா பாவம் நம்ப திருமா அண்ணன் 4 ஆண்டுகளாக தூங்கிட்டு இருக்கார்.. இதுக்கு மேல் ஒரு அவமானம் வேண்டுமா..? என கூறினார்.