தமிழக செய்திகள்

புலியைப் பார்த்து பூனை கோடுபோட்ட கதை - விஜயை விமர்சித்த திருமாவளவன்

திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடியவில்லை என திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை,

உலக மகளிர் தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மகளிர் தின விழா நேற்று மாலை கொண்டாடப்பட்டது. த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும், வருடத்திற்கு 6 சிலிண்டர் இலவசம், திருமணத்திற்கு 8 கிராம், ஒரு பட்டுபுடவை, அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவசம், தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தங்க மோதிரம் என்பது உள்ளிட்ட 12 வாக்குறுதிகளை மகளிர் தின விழாவில், விஜய் அறிவித்துள் இருந்தார்.

இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

புலியை பார்த்து பூனை கோடு போட்டு கொண்ட கதை என்று சொல்வார்களே அப்படித்தான் என்று நான் கருதுகிறேன். திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு நடைமுறைபடுத்தி வருகிறது.

பல புதிய அறிவிப்புகளையும் மகளிர் நலன் கருதி அறிவித்துள்ளது. இதனை எதிர்கொள்வதற்கு இத்தகைய வாக்குறுதிகளை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அது எந்த வகையிலும் திமுக கூட்டணியின் செல்வாக்கை பாதிக்காது. திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடியவில்லை என்றார்.