சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் , தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பேசியதாவது:-
விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன் முதலாக அமைச்சரவையில் இடம்பெற்று ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்துகொண்டுள்ளது. தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க. போன்ற கட்சிகளில் உள்ள தலித் ஒருவர் அமைச்சர் ஆவதற்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள்ள தலித் ஒருவர் அமைச்சரவையில் இடம்பெறுவதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. எந்த பின்புலமும் இல்லாமல் சூது, சூழ்ச்சி நிறைந்த அரசியலில் பல அவமானங்களை சகித்து கொண்டோம். எதிர் நீச்சல் அடித்து இந்த இடத்தை எட்டியுள்ளோம். வேறு இயக்கமாக இருந்திருந்தால் இதை பெரிய சாதனையாக கொண்டாடியிருப்பார்கள். இப்போதும் கூட நாம் புறக்கணிக்கப்போடுகிறோம்.
குறி வைத்து கடுமையாக விமர்சிக்கப்படுகிறோம் என்ற நிலைதான் இருக்கிறது. இதை கவனத்தில் வைத்து அரசியலை வீரியமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. 2 எம்.எல்.ஏ.க்கள்., 2 எம்.பி.க்கள், மாநில கட்சி அங்கீகாரம், ஆட்சி அதிகாரத்தை பகிர்வு ஆகிய தகுதிகளை பெற்றுள்ளோம். தி.மு.க. கூட்டணியில் இருந்துபோதும் சரி, தற்போது த.வெ.க. கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள போதிலும் சரி நம்மை இழிவாக விமர்சித்து வருகிறார்கள்.
இன்றைக்கு தமிழக அரசியல் சூழல் தலைகீழாக மாறியுள்ளது. இந்த நிலையிலும் கூட நாம் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக களமாடி வருகிறோம். எனவே, இதை கருத்தில் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.