உடுமலை,
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல் குருமலை, கீழ் குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டையாறு, பாரப்பட்டியாறு, குருமலைஆறு, கிழவிப்பட்டி ஆறு, உப்புமண்ணபட்டி ஆறு, உள்ளிட்டவை நீராதாரமாக உள்ளது.
வனப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும்போது ஆறுகளில் நீர் வரத்து ஏற்படுகிறது. ஆறுகள் வனப்பகுதியில் பல்வேறு விதமாக பிரிந்து ஓடினாலும் இறுதியில் பஞ்சலிங்க அருவியில் ஒன்று சேர்ந்து விடுகின்றது.
இதனால் அருவியில் ஒருமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் 6 மாத காலத்திற்கு நிலையான நீர்வரத்து ஏற்படும் சூழல் உருவாகி விடுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் பஞ்சலிங்க அருவியின் நீராதாரங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் உள்ள தடுப்புகளை தாண்டி தண்ணீர் கொட்டி வருகிறது. அந்த தண்ணீர் அடிவாரப் பகுதியில் பிரம்மா, சிவன், விஷ்ணு உள்ளிட்ட மும்மூர்த்திகள் சுயம்புவாக எழுந்தருளியுள்ள குன்று சப்தகன்னிமார் கோவிலை தழுவிவாறு திருமூர்த்தி அணையை அடைந்தது.
அடிவாரத்தி உள்ள அமணலிங்கேஸ்வரர் மற்றும் விநாயகர் கோவில் வெள்ள நீர் புகுந்து உள்ளது. இதனால் கோவிலின் அனைத்து பூஜைகளும் நிறுத்தப்பட்டு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருவதற்கு கோவில் நிர்வாகம் தடைவிதித்து உள்ளது.