சென்னை,
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால அனுமதி அளித்துள்ளது இந்த தீர்ப்பைமறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்தார். இது குறித்து ,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சர்வே கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலதுசாரி சங் பரிவார் அமைப்புகளின் தவறான கோருதலை ஏற்கும் வகையில் தீர்ப்பு அமைந்துள்ளது.
இந்த ஆண்டு மட்டும், அதுவும் ஒரே ஒருநாள் மட்டும் தீபம் ஏற்றலாம் என்பது, அங்கு சில நூற்றாண்டுகளாக நடைமுறை வழக்கமாகவும் பாராம்பரிய முறையாகவும், சமூக நல்லிணக்கத்துடன் நடந்து வரும் தீப திருவிழா முறையை முறிப்பதும், புதிய முறையை அறிமுக படுத்துவதும் சமூக நல்லிணக்கத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்பதை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளாதது வியப்பளிக்கிறது.
சட்டத்தின் அடிப்படையிலும்,உரிய வரலாற்று ஆதாரங்கள் மற்றும் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டிய நீதி மன்றம் , நம்பிக்கையின் அடிப்படையில் இத்தகைய ஓர் இடைக்கால தீர்ப்பு வழங்கியிருப்பது அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை பண்பான மதச்சார்பின்மைக்கு எதிரானதாகும்.
ஆகஸ்ட் 15, 1947 அன்று வழிபாட்டு தலங்கள் எந்த நிலையில் இருந்தனவோ, அதே தன்மையுடன் அவைகள் தொடர வேண்டும் என்பதை உறுதி செய்யும் 1991 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு எதிரானதாகும்.
எனவே, உடனடியாக இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு மறுபரிசீலனை செய்து, ரத்து செய்ய வேண்டும் . தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சீராய்வு செய்யும் புதிய மனுத்தாக்கல் செய்து, இடைக்கால உத்தரவை செயலிழக்க செய்ய வேண்டியது உடனடி தேவையாகும் .
திருப்பரங்குன்றத்தில் வழிவழியாக பாதுகாத்து வரும் மதநல்லிணக்கத்தை உறுதி செய்திட, அனைத்து பிரிவு மக்களும் ஒன்றுபட்டு அமைதியை பாதுகாக்க, தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை
வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.