அண்ணாமலை 
தமிழக செய்திகள்

திருப்பரங்குன்றம் விவகாரம்: பிடிவாதத்தை கைவிட்டு நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளியுங்கள்: அண்ணாமலை வலியுறுத்தல்

சட்டமும் நீதியும் அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது என்று அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை,

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பிடிவாதத்தை கைவிட்டு நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளியுங்கள் என்று தமிழக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, 'வீ த லீடர்ஸ்' அமைப்பை தொடங்கியுள்ள அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

கார்த்திகை தீபம்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டு இன்று, நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கும் தமிழக அரசின் பிடிவாதமான போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது என்று அண்ணாமலை தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவு

நீதிமன்றத்தின் உத்தரவு என்பது அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்பல்ல, அது அரசு, அரசு அதிகாரிகள் மற்றும் சட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அமைப்புகளையும் கட்டுப்படுத்தும் உத்தரவு என்பதை சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தியுள்ளது.

இடைநீக்கம்

மேலும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மறுத்த திருப்பரங்குன்றம் கோவில் அறங்காவலர் குழுவையும் இடைநீக்கம் செய்து, நாளை மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும், முருகப்பெருமானின் பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

பக்தர்கள் நம்பிக்கை

இனியாவது தமிழக அரசு தனது பிடிவாதத்தை கைவிட்டு, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளிக்க வேண்டும். லட்சக்கணக்கான முருக பக்தர்களின் நம்பிக்கையோடும், இறை உணர்வோடும் விளையாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

நீதிமன்ற உத்தரவே இறுதியானது

சட்டமும் நீதியும் அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது. கலெக்டர்களுக்கு பிடித்திருக்கிறதா, இல்லையா என்பது முக்கியமல்ல, நாட்டின் சட்டமும் நீதிமன்றத்தின் உத்தரவுமே இறுதியானவை.

சற்று ஒதுங்கி நின்று

இந்த சூழலில், அனைத்து அரசியல் கட்சிகளும் மத அமைப்புகளும் சற்று ஒதுங்கி நின்று, முருக பெருமானின் பக்தர்கள் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு வழிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது இந்த நிகழ்வு அமைதியான முறையில் நடைபெறுவதையும், பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றி தங்கள் நம்பிக்கையை பின்பற்றுவதையும் உறுதிசெய்ய உதவும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT