தமிழக செய்திகள்

திருப்பரங்குன்றம் வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் - எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கோரப்பட்டதாகக் கூறப்படும் தகவல்களும் உரிய நிர்வாக ரீதியான தெளிவுபடுத்தலை வேண்டுகின்றன.

சென்னை,

திருப்பரங்குன்றம் வழக்கில் உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் நடுநிலைத்தன்மை குறித்து எழுந்துள்ள சந்தேகங்களை கருத்தில் கொண்டு, வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவது குறித்து தலைமை நீதிபதியிடம் அரசு தலைமை வழக்கறிஞர் முறையிட வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம் வழக்கு

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொறுப்புத் தலைவர் அச.உமர் பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், சென்னை ஐகோர்ட் மதுரைக் கிளையில் நடைபெற்று வரும் விசாரணை நடைமுறைகள் மற்றும் சில நிகழ்வுகள் குறித்து பொதுவெளியிலும், சட்ட வட்டாரங்களிலும் பல்வேறு ஆரோக்கியமான விவாதங்களும் கேள்விகளும் எழுந்துள்ளன.

இந்த வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு விசாரணை நிலுவையில் உள்ள சூழலில், வழக்கு விசாரணையில் தொடர்புடைய ஐகோர்ட் நீதியரசர் பொதுநிகழ்வுகளில் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியான கருத்துகள், நீதித்துறையின் நடுநிலைத்தன்மை குறித்த விவாதங்களைத் தூண்டியுள்ளன. ஒரு நீதிபதி தனது தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் மட்டுமே செயல்படுகிறார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை பொதுமக்களிடம் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் அடிப்படை.

அதேபோல், இந்த வழக்கு தொடர்பான உத்தரவுகளுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட கோயிலுக்கு நீதியரசர் சென்றதும், அங்கு அவருக்கு சுவரொட்டி விளம்பரங்கள் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்திகளும் பொதுமக்களிடையே விவாதத்திற்குரியதாகியுள்ளன. நீதிபதிகளின் தனிப்பட்ட வழிபாட்டு உரிமை என்பது மதிக்கப்பட வேண்டிய ஒன்று என்றாலும், பொதுவெளியில் நிகழும் இத்தகைய கொண்டாட்டங்கள் நீதித்துறைப் பொறுப்புக்கும் தனிப்பட்ட செயல்பாடுகளுக்கும் இடையிலான எல்லை குறித்து சாமானிய மக்களிடம் தேவையற்ற ஐயங்களை ஏற்படுத்தக்கூடும்.

144 தடை

மேலும், மதுரையில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட விதம் குறித்தும் சட்ட வல்லுநர்களிடையே கேள்விகள் எழுப்பப்படுகின்றன. வழக்கமான நீதிபதி விடுப்பில் இருந்த சூழலில், மதிய வேளையில் அவசர வழக்காக இது விசாரிக்கப்படுவதும், வழக்கின் வரம்புக்கு அப்பாற்பட்டதாகக் கருதப்படும் சுப்ரீம் கோர்ட் நடைமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கோரப்பட்டதாகக் கூறப்படும் தகவல்களும் உரிய நிர்வாக ரீதியான தெளிவுபடுத்தலை வேண்டுகின்றன.

இந்த நடைமுறைகள் அனைத்தும் விதிகளுக்கு உட்பட்டே நடந்திருந்தாலும், "நீதி வழங்கப்படுவது மட்டுமல்ல, அது வழங்கப்படுவது வெளிப்படையாகத் தெரியவும் வேண்டும்" என்ற நீதித்துறை கோட்பாட்டின்படி, இதுகுறித்த தெளிவான விளக்கம் மக்கள் மத்தியில் நீதித்துறையின் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும்.

நீதிபதி

நீதிபதிகளின் தனிப்பட்ட நோக்கங்களை விமர்சிப்பதோ அல்லது நீதிமன்றத்தின் மாண்பைக் குறைப்பதோ எமது நோக்கமல்ல. மாறாக, இந்திய நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையும், அதன் நடுநிலைத்தன்மையும் எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எமது முதன்மையான கவலை.

எனவே, இந்த வழக்கில் எழுந்துள்ள பொதுமக்களின் நியாயமான சந்தேகங்களைக்களையும் விதமாகவும், நீதித்துறையின் உயரிய மாண்பைப் பாதுகாக்கும் விதமாகவும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் உரிய சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, இந்த வழக்கை வேறு ஒரு நீதிபதியின் அமர்வுக்கு மாற்றுவது குறித்து சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT