சென்னை,
தமிழ்நாடு அரசின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை உச்ச நீதிமன்றம் நவம்பர் 20 அன்று அளித்த உத்தரவுக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது வரவேற்கத்தக்கது என மறுமலர்ச்சி தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மறுமலர்ச்சி தி.மு.க தாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
திருப்பரங்குன்றம் மலை மீது சுடர் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நவம்பர் 20 ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அரவிந்த் குமார், விபுல் எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, திருப்பரங்குன்றம் மலை சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் உள்ள அளவைக் கல் மீது சுடர் ஏற்ற வேண்டும் என்று ஜனவரி 6, 2026 அன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்பின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு அடுத்த உத்தரவு வரும் வரை உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26-ஆவது பிரிவுகள் தொடர்பான அடிப்படைக் கேள்விகள் உரிய நேரத்தில் பரிசீலிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.
ஆனால், வருகின்ற கார்த்திகை நாளில் - நவம்பர் 24 அன்று - ஒரு நாள் மட்டும் அளவைக் கல்லில் சுடர் ஏற்ற உத்தரவிட்டுள்ளது.
1923 ஆம் ஆண்டின் மதுரை சார் நிலை நீதிமன்றம், நெல்லித்தோப்பு, மசூதி அமைந்துள்ள பகுதி, கொடிமரம், உச்சிப்பகுதி, படிக்கட்டுகள் தர்காவுக்கு சொந்தம் என்றும் மலையில் அமைந்துள்ள பெரும் பகுதிகள் கோவில் நிர்வாகத்திற்குச் சொந்தம் என்றும் தீர்ப்பளித்தது.
அதையே 1931 ஆம் ஆண்டு மே 12 அன்று லண்டன் பிரிவி கவுன்சில் தீர்ப்பும் உறுதி செய்தது.
வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் 1991(Places of Worship Special Provision Act), 1947ஆம் ஆண்டுக்கு முன்னர் இருக்கும் வழிபாட்டுத்தலங்களை ஒரு மதத்திலிருந்து வேறு ஒரு மதத்திற்கு மாற்றுவதைத் தடை செய்யவும் மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும், பழைய வழிபாட்டுத்தல தகராறுகளை மீண்டும் எழுப்புவதைத் தடுக்கவும் வகை செய்கிறது.
வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் 1991 - இன் படி திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா பகுதியிலோ அல்லது சுடர் ஏற்றும் இடத்தையோ மாற்ற முடியாது.
இதுவரை வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் 1991,வேறொரு சட்டத்தால் ரத்து செய்யப்படவும் இல்லை, உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படவும் இல்லை. எனினும் அச்சட்டத்தை மீறி உச்ச நீதிமன்றம் அளவைக் கல் மீது ஒரு நாள் மட்டும் சுடர் ஏற்ற வழங்கி உள்ள உத்தரவு தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்திற்கும் சமூக அமைதிக்கும் கேடு விளைவிக்கும்.
இந்நிலையில் நேற்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை உச்ச நீதிமன்றம் நவம்பர் 20 அன்று அளித்த உத்தரவுக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது வரவேற்கத்தக்கது.
பல்லாயிரமாண்டு பழமையான வைகை ஆற்றங்கரை மதுரை மண், தமிழர்களின் தொல் நாகரீகத்தின் உன்னத அடையாளம். மத நல்லிணக்கத்தின் தொட்டில் ஆகும்.
எனவே மதுரை - திருப்பரங்குன்றம் மத நல்லிணக்க மரபை சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடிப்பதில் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் செயல்பாடு உறுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.