தமிழக செய்திகள்

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: தமிழ்நாடு அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் பதில்

கார்த்திகை தீபத்திருநாளான வரும் 24ம் தேதி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது.

மதுரை,

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற சுப்ரீம்கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு குறித்த கேள்விக்கு மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பதில் அளித்தார்.

கார்த்திகை தீபத்திருநாள்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடு திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உள்ள மலை மீது அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருநாள் அன்று (2025 - டிசம்பர் 3) தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 2025 டிசம்பர் 1ம் தேதி ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டது.

ஆனால், ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டும் கடந்த திமுக ஆட்சியில் கார்த்திகை தீபத்தினமான 3ம் தேதி (2025) திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.

மேல்முறையீடு

மேலும், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு (கடந்த திமுக அரசு), மலையில் உள்ள தர்கா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்தது.

இதை எதிர்த்து தமிழக அரசு, தர்கா நிர்வாகம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் வரும் 24ம் தேதி கார்த்திகை தீபத்திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதியளித்து உத்தரவிட்டது.

இதையடுத்து, கார்த்திகை தீபத்திருநாளான வரும் 24ம் தேதி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது.

இன்று மாலை அல்லது நாளை

தீபம் ஏற்ற அனுமதி வழங்கி சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ள நிலையில், இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது எதிர்ப்புகளையும், ஆதரவையும் கலவையாக பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற சுப்ரீம்கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு குறித்து அமைச்சர் நிர்மல் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர், “சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். என்ன செய்யலாம்? என்பதை இன்று மாலை அல்லது நாளை காலை அறிவிப்போம். மாவட்ட அளவிலான திட்டப் பணிகள் குறித்து மட்டுமே இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது” என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.

SCROLL FOR NEXT