சென்னை,
நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத த.வெ.க. அரசின் செயல்பாடுகளையும், பொதுமக்கள் மீதான காவல்துறை அடக்குமுறையையும் கண்டித்து மேதகு கவர்னரிடம் புகார் மனு அளித்ததாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
இன்று சென்னை மக்கள் மாளிகையில் தமிழக கவர்னர் அர்லேகர் அவர்களை நேரில் சந்தித்து, திருப்பரங்குன்றம் திருக்கார்த்திகை தீபத் திருநாளின்போது சுப்ரீம்கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாமல் உதாசீனப்படுத்திய தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து விரிவான புகார் மனுவை அளித்தோம்.
சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை மதிக்கத் தவறியதோடு, இந்து மக்களின் மத உணர்வுகளையும் அடிப்படை உரிமைகளையும் புண்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்பட்டதை கவர்னரிடம் சுட்டிக்காட்டினோம்.
மேலும், தங்களது உரிமைகளுக்காகவும் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த கோரியும் குரல் கொடுத்த பொதுமக்களை காவல்துறையினர் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதற்கும், அவர்களது ஜனநாயக உரிமைகளைப் பாதிக்கும் வகையில் செயல்பட்டதற்கும் எங்களது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தோம்.
இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் மத உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னர் அவர்களிடம் வலியுறுத்தினோம்.
நீதிமன்றத்தின் மாண்பை காப்பதும், மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை பாதுகாப்பதும் எங்களது உறுதியான கடமை. இந்த விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை எங்களது ஜனநாயகப் போராட்டம் தொடரும்!
இந்த நிகழ்வில் தமிழக பாஜகவின் மாநில துணைத்தலைவர் சக்ரவர்த்தி அவர்கள் மற்றும் NGO பிரிவு மாநில அமைப்பாளர் இரா. அர்ஜுனமூர்த்தி அவர்கள் உடன் இருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.