சென்னை,
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், கடந்த ஆண்டுகளில் எந்தவொரு பாரம்பரிய நடைமுறை பின்பற்றப்பட்டதோ, அதே நடைமுறைதான் தொடரும் எனவும், மதவாத சக்திகள் உள்ளே வந்து அரசியல் செய்ய அனுமதிக்க மாட்டோம் எனவும் தமிழ்நாடு அரசின் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளதை எஸ்டிபிஐ கட்சி வரவேற்கிறது. அதேநேரத்தில், இந்த நிலைப்பாட்டில் தமிழக அரசு கடைசி வரை எவ்வித சமரசமுமின்றி உறுதியோடு நிற்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
திருப்பரங்குன்றம் கோவில் மற்றும் அங்கு ஏற்றப்படும் கார்த்திகை தீபம் ஆகியவற்றில் பல தசாப்தங்களாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய நடைமுறைகளுக்கு மாறாக, தர்கா அருகில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்கிற இல்லாத ஒரு புதிய வழக்கத்தைத் திணித்து, அங்கு நிலவி வரும் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கச் சில மதவாத சக்திகள் தொடர்ந்து திட்டமிட்டு முயன்று வருகின்றன. இதுநாள் வரையில் அந்த மதவாத குரல்களைப் புறந்தள்ளி, வழக்கமான நடைமுறையையே முந்தைய அரசுகள் பாதுகாத்து வந்துள்ளன.
குறிப்பாக, கடந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவை முன்வைத்து தர்கா அருகில் தீபம் ஏற்ற எத்தனித்த சக்திகளின் முயற்சியை முறியடித்து, சமூக நல்லிணக்கத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் களத்தில் உறுதியாக நிலைநிறுத்தியது மு.க. ஸ்டாலின் தலைமையிலான முந்தைய திமுக அரசு. நீதிமன்ற உத்தரவாகவே இருந்தாலும், அப்போதைய திமுக அரசின் உறுதியும், பின்விளைவுகள் எதுவாக இருந்தாலும் எதிர்கொள்வோம் (We Will Face the Consequences) என்று கூறிய மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதனின் துணிச்சலான கள நடவடிக்கையுமே திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதவாத சக்திகளின் சதித்திட்டம் எடுபடாமல் முற்றுப்புள்ளி வைத்ததற்கு காரணமாக அமைந்தது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மக்கள் அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் மட்டுமே விரும்புகிறார்கள். எனவே, நீதிமன்ற உத்தரவுகள் என்ற பெயரில் வரும் நெருக்குதல்களைக் காரணம் காட்டி, பாரம்பரிய நடைமுறைகளிலிருந்து அரசு பின்வாங்கிவிடக் கூடாது என்பதை தற்போதைய தமிழக அரசுக்கு முதன்மையான கோரிக்கையாக முன்வைக்கின்றோம்.
சமீபத்தில் குர்பானி விவகாரத்தில், "நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றிவிட்டோம்" என நீதிமன்றத்தில் அரசு அறிக்கை அளித்து கைகழுவியது போன்றதொரு ஏமாற்றகரமான நிகழ்வு, இந்த திருப்பரங்குன்றம் விவகாரத்திலும் மீண்டும் அரங்கேறிவிடக் கூடாது. நீதிமன்ற உத்தரவாகவே இருந்தாலும், பழைய நடைமுறையைப் பாதுகாப்பதிலும், சமூக நல்லிணக்கத்தையும் அமைதியையும் காப்பதிலும் தற்போதைய அரசு களத்தில் உறுதியாக நிற்க வேண்டும்; அதோடு நின்றுவிடாமல், சட்டக் களத்திலும் வலுவாகப் போராட வேண்டும்.
ஆகவே, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் தலைமையிலான அரசின் நடவடிக்கையானது, தமிழகத்தின் மதச்சார்பின்மையையும், சமூக நீதி அடிப்படையிலான ஆட்சியையும் வார்த்தைகளில் மட்டுமல்லாமல், செயலில் உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.