தமிழக செய்திகள்

திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழக அரசின் சீராய்வு மனு இன்று விசாரணைக்கு வருமா?

கடந்த நவம்பர் 20-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி, தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த இடைக்கால உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவு

கார்த்திகை தீபத்திருவிழாவின்போது கோவில்களில் தீபம் ஏற்றப்படுவது மரபாக இருந்து வருகிறது. இந்த நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இதுதொடர்பாக இந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம.ரவிக்குமார் உள்ளிட்டோர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

ஆனால், அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட்டு இரு நீதிபதிகள் அமர்வு, கடந்த ஜனவரி 6-ந்தேதி தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது.

சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. மலை உச்சியில் உள்ள தூண் நில அளவைக்கல் என்றும், பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டு நடைமுறைகளில் மாற்றம் செய்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த 20-ந்தேதி முக்கிய இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

அதன்படி, மதுரை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், கார்த்திகை தீபத்திருநாளான 24-ந்தேதி ஒருமுறை மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்தனர்.

இதற்கு கடுமையான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. கோவில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே தீபம் ஏற்றச் செல்ல வேண்டும் என்றும், பொதுமக்கள் அங்கு செல்ல அனுமதி இல்லை என்றும் உத்தரவிடப்பட்டது. மேலும், ஊர்வலம் நடத்துதல், கோஷம் எழுப்புதல் உள்ளிட்டவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டது.

தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுக்கு இந்து அமைப்புகள் வரவேற்பு தெரிவித்தன. அதே நேரத்தில், பல்வேறு அரசியல் கட்சிகள் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தின.

இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால உத்தரவு தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த நவம்பர் 20-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி, தமிழக அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டி.விஜய் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், திருப்பரங்குன்றம் மலையில் குறிப்பிட்ட கல்தூணில் தீபம் ஏற்றுவது அத்தியாவசியமான சமய நடைமுறையா என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 1959-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி, உச்சிப்பிள்ளையார் கோவிலில் விளக்கு ஏற்றுவதே தற்போதைய வழக்கமாக உள்ளது என்றும், வேறு இடத்தில் தீபம் ஏற்ற உத்தரவிடுவது பாரம்பரிய வழக்கத்திற்கு எதிரானது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் என வாதம்

சர்ச்சைக்குரிய இடத்தில் தீபம் ஏற்ற அனுமதிப்பது திருப்பரங்குன்றத்தில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் தமிழக அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

எனவே, இந்த வழக்குகளின் இறுதி தீர்ப்பு வெளியாகும் வரை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என்றும், நவம்பர் 20-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று விசாரணைக்கு வருமா?

கார்த்திகை தீபத் திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அவசர சீராய்வு மனு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த மனுவை, ஏற்கனவே தீபம் ஏற்ற அனுமதி அளித்த நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆனால், இன்று அந்த இரு நீதிபதிகளும் ஒரே அமர்வில் அமர்ந்து வழக்குகளை விசாரிக்கவில்லை. இருவரும் வெவ்வேறு நீதிபதிகள் அமர்வுகளில் அமர்ந்து வழக்குகளை விசாரிக்க உள்ளனர். மேலும், நாளை குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசின் சீராய்வு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒருவேளை, நீதிபதி பிரசாந்த் குமார் முன்னிலையில் தமிழக அரசு தரப்பில் ஆஜராகி, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க வாய்ப்புள்ளது. அந்தக் கோரிக்கையை ஏற்று சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டு இன்றே விசாரணை நடைபெறுமா? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தப்படுகிறது.

SCROLL FOR NEXT