சென்னை,
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் த.வெ.க. அரசு எடுத்த முடிவை வரவேற்பதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் வெறும் சர்வே கல்லை தீபத் தூணாக்கி – ஆர்.எஸ்.எஸ்., இந்து மதவெறி அமைப்பு, தமிழ்நாடு மத நல்லிணக்கத்தோடும், அமைதிப் பூங்காவாகவும் இருப்பதையும், பா.ஜ.க. அரசியலில் காலூன்ற முடியாத நிலையினையும் மாற்றிட, மதக் கலவரத்தை, அயோத்தி கலவரப் பாணியில் நடத்தி, பா.ஜ.க.வை அரசியலில் கோலோச்ச செய்யும் யுக்தி மூலமும், திட்டமிட்ட கலவரங்கள் மூலமும் தேர்தல் வெற்றிகளைப் பறிக்கலாம் என்பதற்காக திருப்பரங்குன்றம் பிரச்சினையை உருவாக்கி, இஸ்லாமியர்களின் தொழுகை இடத்தோடு வம்பு, வல்லடி நிகழ்வுகளைக் கடந்த காலத்தில் தொடர்ந்து நடத்தி வந்தனர்; வருகின்றனர் என்பதை விவரம் புரிந்த மக்கள் அறிவர்.
திருப்பரங்குன்றத்தில் உள்ளூரில் மத நல்லிணக்கத்துடன் எவ்வித பேத - மாச்சரியமின்றி அனைவரும் உள்ள நிலையில், அங்கு இப்படி ஒரு சர்வே கல்லை ‘தீபத்தூணாக்கி’ அதில்தான் விளக்கேற்றுவோம் என்று கலவரம் செய்வது, அதற்கு ஆர்.எஸ்.எஸ். அனுதாபமும் உள்ள சில நீதிப் போக்கினையும் பயன்படுத்தி, அரசியலமைப்புச் சட்டத்தின் (Article) 25, 26 ஆகியவற்றைப் புறந்தள்ளி, வெளிப்படையாக, மக்கள் நலத்திற்கும், தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்கும் வண்ணமும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வருவதை நாடறியும்.
கடந்த கால ‘திராவிட மாடல்’ அரசு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இருந்தபோது, மதவெறி சக்திகளின் எண்ணம் நிறைவேறாத வகையில் இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்தி, வரலாறு படைத்தது – மக்கள் நலம், பொது அமைதி கருதி!
முந்தைய ‘திராவிட மாடல்’ தி.மு.க. அரசின் நிலைப்பாட்டினையே, தற்போது முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் உள்ள த.வெ.க. அரசும் இப்பிரச்சினையில் எடுத்தது வரவேற்கத்தக்கதாகும்.
இரண்டு அரசுகளும் எடுத்த நிலைப்பாட்டின் நோக்கம், தமிழ்நாடு மதக் கலவர பூமியாகி விடக்கூடாது என்பதுதான்! – தமிழ்நாட்டின் பாரம்பரிய சமூக நல்லிணக்கம் காத்து வரும் பெரியார் மண் என்பதை நிலைநாட்டவும் மேற்கொள்ளப்பட்ட சரியான முயற்சி இது!
சென்னை உயர்நீதிமன்றத்தின் சில தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீட்டை சுப்ரீம்கோர்ட்டில் செய்தபோது, அதனை விசாரித்த அமர்வில், முக்கிய தீர்வுக் காண முடியவில்லை. அதன் இடைக்கால ஆணை ஒன்றில் ஒரு நாள் மட்டும் பிரச்சினைக்குரிய சர்வே கல்லில் தீபம் ஏற்றலாம் என்ற தீர்ப்பு முழுமையாகத் தீர்க்கப்படுவதற்கு முன்னமே வழங்கிவிட்டது போன்ற ஒன்றாகும்.
அதிர்ச்சிக்குரிய இந்த உத்தரவு, அரசியலமைப்புச் சட்ட விரோத, நியாய விரோதமானது என்பதை நாம் 21.11.2026 அன்றைய அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தோம். ‘‘இதில் முந்தைய தமிழ்நாடு தி.மு.க. அரசு காட்டிய அதே உறுதிப்பாட்டுடன் இருக்கவேண்டும்'' என்றும், இன்றைய அரசுக்கு வற்புறுத்தினோம்!
த.வெ.க. அரசு - முதல்-அமைச்சரின் செயல்பாடுகளில், ஆளுமையில் கருத்து மாறுபாடுகள் நமக்கு இருந்தாலும்கூட, இதுபோன்ற முக்கிய நிலைப்பாட்டில், தி.மு.க. அரசின் நிலைப்பாட்டினையே உறுதியாகப் பின்பற்றி, இறுதிவரையில் உறுதியோடு இருந்ததைப் பாராட்டி வவேற்பது நமது கடமையாகும். இது தொடரவேண்டும். இது என்றும் நமது கொள்கைப் பார்வையாகும்.
தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க. (கூட்டணியில் இருப்பதாலோ என்னவோ) தவிர, மற்ற அனைத்துக் கட்சிகளும் ஆகம விதிப்படி எப்படி வழமையாக எங்கு அந்த விளக்கு கார்த்திகை தீபத்தின்போது ஏற்றப்பட்டதோ, அதேபோல் இவ்வாண்டும் நடைபெறவேண்டும். ‘ஒரு நாள் ஏற்றலாம்’ என்ற சுப்ரீம்கோர்ட்டின் ஆணை, மேல்முறையீட்டுக்கான பிரச்சினைக்குத் தீர்ப்பு வழங்கிவிட்டது போன்ற ஒன்று என்பது அனைத்து முற்போக்குக் கட்சிகள், இயக்கங்கள் வற்புறுத்திடும் நிலைப்பாடு.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.