சென்னை,
சுப்ரீம்கோர்ட்டின் இந்த இடைக்கால தீர்ப்பு, மதவாத சக்திகள் குழப்பம் ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்றும், தமிழ்நாடு அரசு விழிப்போடிருக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பரங்குன்றம் வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு அளித்திருக்கும் இடைக்காலத் தீர்ப்பு வியப்பும் அதிர்ச்சியும் அளிக்கிறது. சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு இடக்காலத் தடை விதித்திருக்கும் அதே வேளையில், கார்த்திகை தீபம் (நவ-24)அன்று சர்ச்சைக்குரிய 'கல் தூணின்' உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு சுப்ரீம்கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், தேவைப்பட்டால் துணை ராணுவப் படையினரின் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் வழிகாட்டியுள்ளது. இது மாநில அரசை மறைமுகமாக அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. கல்தூணில் கட்டாயம் தீபநாளன்று தீபத்தை ஏற்றியே ஆகவேண்டும் என்பதில் சுப்ரீம்கோர்ட்டு உறுதியாகவுள்ளது என்பதைக் காட்டுகிறது.
எந்த ஆய்வும் செய்யப்படாமலேயே ஆதாரம் ஏதும் இல்லாமலேயே அந்த இடத்தை அல்லது அந்த கல்தூணை தீபம் ஏற்றுவதற்கான இடம்தான் என்கிற தோற்றத்தையும் நம்பிக்கையையும் உருவாக்குவதாக இது அமைந்துள்ளது.
அதே வேளையில், பின்வருமாறும் சுப்ரீம்கோர்ட்டு கூறியிருப்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
அதாவது, “ இந்தக் கல் தூண், வழக்கமான சமய வழிபாட்டு இடமாக இருந்ததோ அல்லது வரலாற்று ரீதியாக அத்தகைய இடமாக இருந்து வந்ததோ என்ற எந்தவொரு கண்டறிதலின் அடிப்படையிலும் தற்போதைய உத்தரவு அமையவில்லை. மேலும், குறிப்பிட்ட அந்த இடத்தில் விளக்கேற்றுவது ஒரு இன்றியமையாத சமயச் சடங்கா என்பதையோ, அல்லது அவ்வாறு செய்வதற்கான சட்டப்பூர்வமாக அமல்படுத்தக்கூடிய உரிமை ஏதேனும் தனிநபருக்கோ, நிறுவனத்திற்கோ அல்லது சமயப் பிரிவினருக்கோ உள்ளதா என்பதையோ இந்த உத்தரவு தீர்மானிக்கவில்லை" என்றும் சுப்ரீம்கோர்ட்டு குறிப்பிட்டுள்ளது.
“நவம்பர் 24 அன்று, 'தீபத்தூண்' என்று அடையாளப்படுத்தப்படும் கல் தூணில், தேவஸ்தானத்தால் ஏற்பாடு செய்யப்படும் ஒரு குறிப்பிட்ட குழுவினரைக் கொண்டு, சடங்கு ரீதியான தீபத்தை ஏற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும். அந்தக் குழுவில் யார் இடம்பெற வேண்டும் மற்றும் எத்தனை பேர் இருக்க வேண்டும் என்பதை, கோயில் நிர்வாக அதிகாரி, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (Archaeological Survey of India) மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகியோருடன் கலந்தாலோசித்து, மதுரை மாவட்ட கலெக்டர் தீர்மானிக்க வேண்டும்.
மாவட்ட கலெக்டர் இதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக (Nodal officer) செயல்படுவார். பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு, தீபம் ஏற்றும் நேரத்தையும் அதற்கான பாதையையும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும்; சடங்கு முடிந்தவுடன், அந்தக் குழுவினர் உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும். அங்கு எந்தவொரு புதிய அமைப்பையும் உருவாக்குவதற்கோ, கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்வதற்கோ, அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கோ அல்லது நிரந்தர கட்டுமானங்களை அமைப்பதற்கோ அனுமதி இல்லை. அதேபோல், தர்கா மற்றும் மசூதியின் செயல்பாடுகளில் எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது. திருவிழா முடிந்த மூன்று நாட்களுக்குள், இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்த அறிக்கையைச் மாவட்ட கலெக்டர் ஆட்சியர் சமர்ப்பிக்கவேண்டும்"- என சுப்ரீம்கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
'தீபம் ஏற்றுவதற்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் அனுமதியென்பது தற்காலிகமானதுதான்; அதனை நிரந்தரமாகக் கருதக்கூடாது' என்று சுப்ரீம்கோர்ட்டு கூறியிருந்தாலும், இது போன்று இரு வேறு மதங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இதற்கு முன்பு ஐகோர்ட்டுகளும், சுப்ரீம்கோர்ட்டும் வழங்கிய தீர்ப்புகளை வைத்துப் பார்க்கும் போது, இத்தகைய இடைக்கால உத்தரவுகளின்படியே வழக்கின் இறுதிமுடிவுகளும் தீர்மானிக்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இந்த வழக்கிலும் அப்படியான ஒரு முடிவு தான் வருமோ என்கிற அச்சம் எழுகிறது.
தமிழ்நாடு அரசு, சுப்ரீம்கோர்ட்டின் இந்த இடைக்கால தீர்ப்பை செயல்படுத்தும்போது, விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மதவாத சக்திகளின் தூண்டுதலின் பேரில், வெவ்வேறு இடங்களில் விளக்கேற்றும் நடைமுறையை ஒரு முன்னுதாரணமாக உருவாக்குவதால் ஏற்படக்கூடிய விளைவுகளைக் கவனமாக ஆராய வேண்டும். இதேபோன்ற ஆணைகள் ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் பிறப்பிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
மேலும், பாரம்பரியமான இடத்தில் விளக்கேற்றும் தற்போதைய நடைமுறையே தொடர வேண்டும் என்ற அடிப்படையில் முதன்மை வழக்கின் தீர்ப்பைப் பெற வேண்டும். அதற்கு மேலும் திறமைவாய்ந்த வழக்கறிஞர்களை வாதாடுவதற்கு அமர்த்திட வேண்டும்.
மதச் சடங்குகளை நடத்துவது தொடர்பான சர்ச்சைகளை 'ரிட் மனு' (writ petition) மூலம் தீர்க்க முடியாது என்றும், அவை உரிமையியல் வழக்குகள் (civil suits) மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு, சுப்ரீம்கோர்ட்டின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும்.
மேலும், இத்தகைய சிக்கல்களை எழுப்புவதற்குப் பின்னால் உள்ள உண்மையான நோக்கத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து, ஒட்டுமொத்த வழக்கையும் தள்ளுபடி செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும். இந்த இடைக்கால தீர்ப்பை தங்களுக்குக கிடைத்த வெற்றிபோல சித்தரித்து வன்முறைக்கு வித்திடும் சூழலை உருவாக்க மதவாத சக்திகள் முனையலாம். அத்தகைய முயற்சிகளைத் தமிழ்நாடு அரசு விழிப்போடிருந்து முறியடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.