திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை அடுத்த புதூர் கிராமத்தில் உள்ள குளத்தில் சுமார் 20 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு புகுந்ததால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் பொதட்டூர்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் நகர் கிழக்குப் பகுதி மற்றும் புதூர் குடியிருப்புப் பகுதிகளுக்கு மிக அருகே கோரைப்புற்கள் நிறைந்த குளம் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நேற்று (வியாழக்கிழமை) மாலை இந்த குளக்கரையில் மேய்ந்து கொண்டிருந்த கோழி ஒன்றை, சுமார் 20 அடி நீளமுள்ள மலைப்பாம்பு விழுங்கியுள்ளது. இரை விழுங்கியதால் நகர முடியாமல் அந்தப் பாம்பு நீண்ட நேரம் குளத்திலேயே அசைவின்றி கிடந்துள்ளது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து குளக்கரையில் திரண்டனர். பொதுமக்களின் சத்தத்தைக் கேட்ட அந்த ராட்சத மலைப்பாம்பு, குளத்திற்குள் இருந்த அடர்ந்த கோரைப்புற்கள் மற்றும் புதர்களுக்குள் சென்று மறைந்துவிட்டது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் வெளியே வரவே அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் நகரி - திண்டிவனம் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்காக அருகிலுள்ள மலைகள் உடைக்கப்பட்டு வருகின்றன. இதனால், வனப்பகுதியில் வாழும் மலைப்பாம்பு உள்ளிட்ட வன உயிரினங்கள் தங்களின் இருப்பிடம் மற்றும் உணவு தேடி அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
குடியிருப்புப் பகுதிக்கு மிக அருகில் உள்ள குளத்திற்குள்ளேயே இந்த 20 அடி மலைப்பாம்பு பதுங்கி இருப்பதால், கால்நடைகளுக்கும் பொதுமக்களுக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, அந்த மலைப்பாம்பை பாதுகாப்பாகப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.