தமிழக செய்திகள்

திருவள்ளூர்: அமோனியா வாயுவை அகற்றும் பணிகள் 60 சதவீதம் நிறைவு: ஆட்சியர் தகவல்

அமோனியாவை அகற்றும் பணி நாளையும் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த 'புனித பீட்டர் பால் கடல் உணவுப் பொருட் களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில், கடந்த மாதம் 21-ந்தேதி அமோ னியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட 18 பெண் தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 14 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில், விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் உள்ள சுமார் 2 டன் அமோனியா வாயுவை டேங்கர் லாரிகளில் பாதுகாப்பாக மாற்றி அப்புறப்படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அம்மோனியா வெளியேற்றப்பட உள்ளதால் 500 மீட்டர் சுற்றளவில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இன்று காலை இந்த பணி தொடங்கப்பட்டது. தொழிற்சாலையில் உள்ள சுமார் 2 டன் அளவிலான அம்மோனியாவை அகற்றும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா அறிவுறுத்தி இருந்தார். முன்னெச்சரிக்கையாக நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள், மருத்துவ குழுவினர் உள்ளனர்.

இன்று நடைபெற்ற பணிகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “ஆலையில் எஞ்சியுள்ள அமோனியா வாயுவை அகற்றி டேங்கர் லாரிக்கு மாற்றப்பட்டு வருகிறது. இன்று 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. பைப்புகளில் உள்ள அமோனியாவை அகற்றும் பணி நாளை காலை நடைபெறும்.” என்றார்.