தமிழக செய்திகள்

திருவள்ளூர்: மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்; தந்தை-மகன் பலி

உயிரிழந்த தந்தை-மகன் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் கக்கன்ஜி காலனி 3-வது தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 34). கொத்தனார். இவருக்கு ரஞ்சனி (28) என்ற மனைவியும். சைலேஷ் (6), 9 மாத குழந்தை ஹரிஹரன் ஆகிய மகன்களும் உள்ளனர். இவர்களுடன் உறவுப்பெண் கீர்த்தனா (16) என்பவரும் வசித்து வந்தார். இந்நிலையில் செங்குன்றம் அடுத்த அலமாதியில் நடைபெற்ற உறவினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் 5 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் மீஞ்சூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். சோழவரம் அருகே வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த சதீஷ் மற்றும் அவரது மகன் சைலேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ரஞ்சனி, குழந்தை ஹரிஹரன் மற்றும் கீர்த்தனா ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற செங்குன்றம் போக்குவரத்து போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த தந்தை-மகன் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து செங்குன்றம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.