திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் காரில் கடத்திய ரூ.50 லட்சம் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்த போலீசார் தெலுங்கானாவைச் சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.
சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகே செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகராஜா மற்றும் போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பதிவெண் கொண்ட கார் ஒன்று சென்னை நோக்கி அதிவேகமாக வந்தது. அந்த காரின் மீது சந்தேகம் அடைந்த போலீசார், அதனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
காரின் உள்ளே ரகசியமாக கட்டுகட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவற்றை எண்ணிப் பார்த்த போது, மொத்தம் ரூ.50 லட்சம் இருப்பது தெரியவந்தது. காரில் இருந்தவர்களிடம் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து, கணக்கில் வராத அந்த ரூ.50 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், காரில் வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ், சைதி ரெட்டி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் பறிமுதலான ரூ.50 லட்சம் ஹவாலா பணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.50 லட்சம் பணத்தை மேல்நடவடிக்கைக்காக சென்னை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். இந்த பணத்தின் உரிமையாளர் யார்? யாருக்காக கடத்தி செல்லப்பட்டது? என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.