தமிழக செய்திகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: 3,000 பேருக்கு கட்டணமில்லா அனுமதி சீட்டு

பக்தர்கள் எளிதாகவும், சிரமமின்றி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு முதன்முறையாக 3,000 பக்தர்களுக்கு இணைய வழியில் கட்டணமில்லா தரிசன அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் வழிகாட்டுதலின்படி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறவுள்ள கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு 3,000 பக்தர்களுக்கு இணைய வழியில் கட்டணமில்லாமல் தரிசன அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தாண்டு புதிய முன்னெடுப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த உள்ளூர் பொதுமக்களுக்கும் தீபத் திருவிழாவின்போது தரிசனம் செய்ய வாய்ப்பளிக்கும் வகையில் 1,500 அனுமதிச் சீட்டுகள் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மீதம் 1,500 சீட்டுகள் பிற மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த அனுமதிச் சீட்டுகளுக்கு பக்தர்கள் கணினி வாயிலாக குலுக்கள் முறையில் வெளிப்படைத் தன்மையுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்டுள்ள பக்தர்களுக்கு அவர்களது கைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தி மூலம் இணைய வழி அனுமதிச் சீட்டுக்கான இணைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி கார்த்திகை தீபத்திருவிழா நாளான்று உரிய வழிமுறைகளின்படி தரிசனம் செய்திடலாம்.

உள்ளூர் பொதுமக்களுக்கும், பிற மாவட்டத்தை சேர்ந்த பக்தர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கி பக்தர்கள் எளிதாகவும், சிரமமின்றி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், பக்தர்களின் பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகள், வாகன நிறுத்துமிடங்கள், சாலைப் பாதுகாப்பு, அன்னதானம் வழங்குவதற்கான ஒழுங்குமுறைகள், குடிநீர், கழிப்பறை வசதிகள், தூய்மைப் பணிகள், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து அமைச்சர் ரமேஷ் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT