தமிழக செய்திகள்

திருவண்ணாமலையில் பவுர்ணமி, மகா தீப விழாவில் 500 டன் குப்பைகள் அகற்றம்

கடந்த 23-ந்தேதி முதல் நேற்று வரை திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இருந்து சுமார் 500 டன் குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளன.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் மற்றும் மகா தீப விழாவில் சுமார் 500 டன் குப்பைகள் அகற்றப்பட்டது.

பவுர்ணமி, மகா தீபம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் நேற்று முன்தினம் மாலை கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. முன்னதாக கடந்த 23-ந்தேதி இரவு கார்த்திகை மாத பவுர்ணமி தொடங்கி நேற்று முன்தினம் இரவு நிறைவடைந்தது.

வழக்கமாக மகா தீபம் ஏற்றப்படும் நாள் அன்றும், பவுர்ணமி நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வார்கள். அதன்படி கடந்த 23-ந்தேதி நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரையில் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

தூய்மைப் பணி

மகா தீபம் மற்றும் பவுர்ணமியையொட்டி கிரிவலப்பாதையில் தூய்மைப் பணியை மேற்கொள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள், தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் என 2,400 பேர் கடந்த 23-ந்தேதி முதல் சுழற்சி முறையில் தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அவர்கள் கிரிவலப்பாதையில் தூய்மைப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் 288 இடங்களில் அன்னதானம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும் அனுமதியின்றி ஏராளமான இடங்களில் கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதனால் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே அன்னதானத்திற்காக வழங்கப்பட்ட இலைகள், பாக்கு மட்டை தட்டுகள் குவியல், குவியலாக காணப்பட்டது. அவற்றையும் அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

500 டன் குப்பை

மேலும் குப்பைகளை அகற்ற 25 லாரிகள், 28 டிராக்டர்களும் பயன்படுத்தப்பட்டன. கடந்த 23-ந்தேதி முதல் நேற்று வரை திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இருந்து சுமார் 500 டன் குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளதாக திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

தொடர்ந்து கிரிவலப்பாதையில் தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உடனுக்குடன் கிரிவலப்பாதையில் உள்ள குப்பைகளை அகற்றி தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களையும், மாவட்ட நிர்வாகத்தையும் கிரிவலம் சென்ற பக்தர்கள் வெகுவாக பாராட்டினர்.

SCROLL FOR NEXT