திருவண்ணாமலை,
திருவண்ணாமலை வேங்கிக்காலில் தனியார் நிதி நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
திருவண்ணாமலை வேங்கிக்கால் லிங்கா பைரவி நகரை சேர்ந்தவர் அறிவரசன். தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். திருவண்ணாமலையில் பணியாற்றி வந்த இவரை கடந்த வாரம் புதுச்சேரிக்கு பணியிட மாற்றம் செய்து உள்ளனர். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி சென்றார். அவரது மகன் மற்றும் மகள் கல்லூரியில் படித்து வருவதால் அவரது மனைவி உள்பட 3 பேரும் சென்னையில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் அவ்வபோது திருவண்ணாமலைக்கு வந்து செல்வார்கள். இதனால் வீட்டை பூட்டி விட்டு அறிவரசன் புதுச்சேரியிலும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் சென்னையிலும் வசித்து வந்து உள்ளனர்.
இந்த நிலையில் கார்த்திகை தீபத்தையொட்டி வீட்டில் விளக்கு போடுமாறு அருகில் குடியிருப்பவர்களிடம் தகவல் தெரிவித்து உள்ளார். இதையடுத்து அவர்கள் அறிவரசன் வீட்டில் விளக்கு போட சென்ற போது அவரது வீட்டின் வெளி பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்த 3 பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது உள்ளது. இது குறித்து அவர்கள் உடனடியாக அறிவரசனுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இதில் சுமார் 30 பவுனுக்கு மேல் நகை திருட்டு போயிருக்கலாம் என்று அறிவரசனின் உறவினர்கள் தெரிவித்தனர். இது குறித்த முழுவிவரம் அவர் திருவண்ணாமலைக்கு வந்து போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்ட பின்னரே தெரியவரும்.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். மேலும் லிங்கா பைரவி தெருவில் திருட்டு நடைபெற்ற அறிவரசனின் வீட்டின் அருகில் தற்காலிக கார் பார்க்கிங் அமைக்கப்பட்டு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாரின் பலத்த பாதுகாப்பில் திருவண்ணாமலை நகரமே இருந்தும் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.