திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள எரவாஞ்சேரி புதுமனை தெருவை சேர்ந்தவர் ரிலுவானுதீன். இவருடைய மனைவி ஹமீதா பைரோஸ்(வயது 30). இவர் தனக்கு சொந்தமான ஆரம், நெக்லஸ், வளையல், சங்கிலி உள்பட 25 பவுன் நகைகளை எரவாஞ்சேரியில் உள்ள ஒரு வங்கியின் லாக்கரில் வைப்பதற்காக கொண்டு சென்றார்.
அப்போது வங்கியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மறுநாள் லாக்கரில் வைத்துக்கொள்ளலாம் என கூறி உள்ளனர். இதனையடுத்து ஹமீதா பைரோஸ் தங்க நகைகளுடன் தனது ஸ்கூட்டரில் மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். எரவாஞ்சேரி கிழக்கு அக்ரஹாரம் பிள்ளையார் கோவில் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் அவரிடம் இருந்த நகைகளை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.
இதுகுறித்து எரவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் ஹமீதா பைரோஸ் புகார் கொடுத்தார். அதன்பேரில் பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுலகண்ணன், எரவாஞ்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமுவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை அடிப்படையாக கொண்டு நகைகளை பறித்துச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.