தமிழக செய்திகள்

திருவாரூர்: கோவில் நிலங்களை அபகரிக்க போலி பத்திரங்கள் தயாரிப்பு - ஒருவர் கைது

போலியான விவரங்களை சேர்ப்பதற்காக அதிகாரிகளுடன் சேர்ந்து சசிகுமார் திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை,

திருவாரூர் மாவட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில், சொத்துகளை சட்டவிரோதமாக மாற்றுவதற்கும் விற்பதற்கும் வசதியாக, அதிகாரப்பூர்வ நிலப் பதிவேடுகளில் முறைகேடு செய்யப்பட்டு போலி பத்திரங்கள் தயாரிக்கப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வழக்குப் பதிவு

இது தொடர்பாக திருவாரூர் மாவட்டப் பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் சசிகுமார் என்ற நபர் உள்பட, திருவாரூர் இணை சார் பதிவாளர் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது கடந்த ஆகஸ்ட் 21-ந்தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

மோசடி

அதிகாரப்பூர்வ பதிவேடுகளில் உள்ள விவரங்களை அழித்து, போலியான விவரங்களை சேர்ப்பதற்காக அதிகாரிகளுடன் சேர்ந்து சசிகுமார் திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. விருத்தாச்சலம் குமார தேவர் மடம், திருவாரூர் தட்சிணாமூர்த்தி மடம், சில கோவில் நிலங்கள் மற்றும் அடியாக்கமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் நிலங்களுக்கு சொந்தமான சொத்துக்களுக்கான பட்டாக்களை சட்டவிரோதமாக அபகரிக்க இந்த மோசடி செய்யப்பட்டுள்ளது.

கைது

இந்த போலி பத்திரங்கள் மூலம் சம்பந்தப்பட்ட நிலங்களை சசிகுமார் விற்றுள்ளார். இது தொடர்பான விரிவான விசாரணையின் அடிப்படையில், கடந்த 3-ந்தேதி சசிகுமார் கைது செய்யப்பட்டார். அவர் திருவாரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த மோசடியில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT