தமிழக செய்திகள்

திருவாரூர்: கார் மோதி மாணவர்கள் உயிரிழப்பு - டிடிவி தினகரன் இரங்கல்

கார் ஒன்று சாலையோரம் நடந்து சென்ற பள்ளி மாணவர்கள் மீது மோதியது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டை என்ற பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. மாலை பள்ளி முடிந்த நிலையில், மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார் ஒன்று சாலையோரம் நடந்து சென்ற பள்ளி மாணவர்கள் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் உலகநாதனை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. கார் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிடிவி தினகரன் இரங்கல்

இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

மன்னார்குடி அருகே காரக்கோட்டையில் கார் மோதி (3) பள்ளி மாணவர்கள் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

மாணவர்களை இழந்துவாடும் அவரவர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.