திருவெண்ணெய்நல்லூர்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மாமந்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜதுரை. இவர் உளுந்தூர்பேட்டை பட்டாலியன் போலீசில் பணிபுரிகிறார். இவரது மனைவி யுவஸ்ரீ(வயது 29). இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. தற்போது யுவஸ்ரீ நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வளைகாப்பு செய்து பெரியசெவலையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் மாலை வீட்டின் மாடியில், யுவஸ்ரீ நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார்.
அப்போது அவர் திடீரென தவறி கீழே விழுந்தார். இதை பார்த்த குடும்பத்தினர் ஓடிச்சென்று அவரை, மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த யுவஸ்ரீ இரவு 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் வயிற்றில் வளர்ந்த அவரது சிசுவும் உயிரிழந்தது. இதையறிந்ததும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகிரி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணி கீழே விழுந்து சிசுவுடன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.