சென்னை,
திருவொற்றியூர் ஆதி புரீஸ்வரர் கவசம் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிச னம் செய்தனர்.
கவசம் திறப்பு நிகழ்ச்சி
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுரை வடிவுடையம்மன் கோவிலில் உள்ள ஆதிபுரீஸ்வரர் மூலஸ்தானம் உள்ள சிவலிங்கம் புத்து வடிவில் இருப்பதால் தங்க கவசம் கொண்டு மூடப்பட்டிருக்கும். இந்த தங்க கவசம் ஆண் டுக்கு 3 நாட்கள் கார்த்திகை மாதம் பவுர்ணமியில் இருந்து மூன்று நாட்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு நிகழ்ச்சி நேற்று முதல் நாளாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து மூன்று நாட்களிலும் தரிசனம் செய்வார்கள் என்ப தற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கோவில் வளாகத்திற்குள் கம்புகளால் வரிசை கட்டப்பட்டு பக்தர்கள் இந்த வரிசை மூலம் அனுப்பப்பட்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை 6 மணி அளவில் சாமி கவசம் திறக்கப்பட்டது. இதற்காக நேற்று மதியம் முதலே பக்தர்கள் வரிசையில் நின்று நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வரிசையானது கோவில் முன்புள்ள பிரதான சாலை வரை அதாவது அகத்தீஸ்வரர் ஆலயம் கோவில் வரை பக்தர்கள் வரிசை நின்றது. இன்றும்(புதன்கிழமை), நாளையும் பக்தர்கள் நேரடியாக தரிசிக்கலாம்.
இந்த ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் நற்சோனை உள்ளிட்ட அதிகாரிகள் செய்திருந்தனர்.
தேவர்களை தொட்டு வணங்க...
திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு குறித்து கோவில் பூசாரி அருள் நந்தி சிவம் கூறியதாவது:-
திருவொற்றியூரில் ஆதிபுரீஸ்வரர் காலம் காலமாக புற்று வடிவில் இருப்பதால் தேவர்கள் யாரும் சாமியை தொட்டு வணங்க முடியாத நிலை உள்ளது. தொட்டு வணங்கினால் புற்று சிதைந்து விடும். தேவர்கள் சாமியை தொட்டு வணங்க முடியாததால் அவர்களின் சக்தி குறைந்து வந்தது. எனவே தேவர்கள் சிவபெருமானிடம் வேண்டியதன் அடிப் படையில் ஆண்டுக்கு ஒருமுறை கார்த்திகை மாதம் பவுர்ணமி திதியில் இருந்து 3 நாட்கள் தேவர்களை தொட்டு வணங்க அனுமதித்ததாகவும், அதன்படி முதல் நாள் பிரம்மா, 2-ம் நாள் விஷ்ணு, 3-ம் நாள் ஆதிசேஷன் ஆகியோர் ஆதிபுரீஸ்வரருக்கு பூஜை செய்து வழிபடுவதாகவும் ஐதீகம். அதற்காக தான் இந்த 3 நாட்கள் கவசம் திறந்து மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.
பொதுவாக கார்த்திகை மாதம் பவுர்ணமியும், கார்த்திகை தீபமும் ஒரு நாள் முன்பின் வரும். ஆனால் இந்த ஆண்டு, பவுர்ணமியும், கார்த்திகை தீபமும் ஒரே நாளில் வந்துள்ளது கூடுதல் சிறப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.